திருப்பூர், மே 12-
திருப்பூர் வட்டாரத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் அளவை குறைத்து வழங்குவதால் ஏழை மக்கள் இந்த பொருட்களை வாங்க முடியாமல் மனம் குமுறுகின்றனர்.குறிப்பாக மிகவும் வறிய நிலையில் கஷ்டப்படும் மக்கள் ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெயை நம்பித்தான் அடுப்பு எரிக்கும் நிலை உள்ளது.
வெளி மார்க்கெட்டில் லிட்டர் ரூ.55 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் ரேசன் கடைகளில் லிட்டர் ரூ.13.90 க்கு வழங்கப்படுகிறது. ஆனால் சமீப மாதங்களாக திருப்பூர் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது.இதனால் ரேசன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் வாங்கச் செல்லும் ஏழை மக்கள் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு கடைக்கும் சுமார் 70 சதவிகிதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குடிமைப்பொருள் துறையினர் தெரிவித்தனர்.மாநகராட்சிப் பகுதிகளில் வறியோருக்கு தலா 10 லிட்டர், நகராட்சிப் பகுதிகளில் தலா 6 லிட்டர் மற்றும் கிராமப்புறங்களில் தலா 3 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் விநியோக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு வெட்டப்பட்டிருப்பதால் சராசரியாக ஒரு கடைக்கு நூறு குடும்பங்களாவது மண்ணெண்ணெய் பெற முடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். புதிதாக விண்ணப்பித்து ரேசன் கார்டு பெறுவோர் யாருக்குமே மண்ணெண்ணெய் கிடையாது என்ற நிலையே உள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கும் ரேசன் பொருட்கள் அளவை ஒரு பக்கம் குறைத்திருக்கிறது. இங்கு கிடைக்கும் அளவையும் முறைகேடு இல்லாமல் ஏழை மக்களுக்கு விநியோகிப்பதில்லை. இந்நிலையில் அதிகாரிகள் கள்ளச்சந்தை விற்பனையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ரேசன் கடைகளுக்கு பகிர்ந்து அளிப்பதையும் கடுமையாகக் குறைத்து விடுகின்றனர்.
இதனால் ஏழைகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பருப்பின் அளவும் குறைப்புஅதேபோல் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு வகைகள் வெளி மார்க்கெட்டில் அதிக விலையில் விற்கப்படுவதால் ரேசன்கடைகளில் குறைந்த விலையில் பருப்புகள் வழங்கும் நடைமுறை முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
திருப்பூர் வட்டாரத்தில் வளர்மதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடத்தப்படும் 118 கடைகள் மற்றும் கிராமப்புறக் கடைகள் 125 என மொத்தம் 243 கடைகளுக்கும் 60 சதவிகிதம் அளவுக்கே பருப்பு வகைகள் வழங்கப்படுகின்றன. இந்த பருப்புகளும் ஏழை, எளிய மக்களுக்கு முழுமையாக விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே அரசு நிர்வாகம் திருப்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து பகுதி மக்களுக்கும் உரிய ரேசன் பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்விசயத்தில் மாவட்ட நிர்வாகம் பாராமுகமாகச் செயல்பட்டால் வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: