திரு.கோடு, மே 12-
எலச்சிபாளையம் செக்காங்காடு அருந்ததியர் மக்களுக்கு கழிப்பிட வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. எலச்சிபாளையம் அருகில் உள்ள அகரம் கிராமத்தில் செக்காங்காடு அருந்ததியர் தெரு உள்ளது. இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பை சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
இங்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் அருகிலுள்ள ஓடை புறம்போக்கு பகுதியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சாதிய ஆதிக்க சக்தியினர் தலித் பெண்களை ஆபசமாக படம் எடுத்து மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.
இதையடுத்து சிபிஎம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போன்ற கொடுமைகளில் இருந்து தலித் பெண்களை பாதுகாத்திடும் விதத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் பொதுக்கழிப்பிட அமைத்துக்கொடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து இப்பகுதி தலித் பெண்களை துன்புறுத்தி வரும் சாதிய ஆதிக்க சக்தியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதிதர மறுத்தது. தடையை மீறி மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது. பின்னர் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை கடைசி வரை அனுமதிக்க வில்லை. உண்ணாவிரத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.ஆதிநாராயணன், கே.தங்கமணி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சி.துரைசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ப.ராமசாமி, மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் மாதவி மற்றும் செல்வம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். கட்சியின் மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சுந்தரம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: