கோவை, மே.12-கோவை அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மறித்து தனியார் பள்ளி நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் பாதையின்றி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருகின்றனர். கோவை அருகே உள்ள நம்பர் 24 வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே அப்பகுதியில் உள்ள 8 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்த பள்ளியில் அருகே உள்ள பொதுப்பாதையை காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் பள்ளியின் அருகே உள்ள பொதுப்பாதையை முன்வேலியை வைத்து மறைத்திருக்கிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு சென்று வேலியை அகற்ற கோரியுள்ளனர். உடனே பள்ளி நிர்வாகம் அகற்றியிருக்கிறது. சில தினங்கள் கழித்து மீண்டும் பாதையை வேலியை வைத்து அடைத்திருக்கிறது. மீண்டும் மக்கள் போய் முறையிட்டவுடன் வேலியை அகற்றுவதும், மீண்டும் அடைப்பதுமாக இருந்து வந்திருக்கிறது. இதையடுத்து இப்பகுதி மக்கள் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் யாரும் பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்கவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சில தினங்களில் பொதுப்பாதையை முழுவதுமாக மறித்து சுற்று சுவர் எழுப்பிவிட்டது. பின்னர் பள்ளியின் தொடக்க பகுதியில் இருந்து முடிவு பகுதி வரை உள்ள நீண்ட பாதையை தனது ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வந்து தற்போது பயன்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள செல்வபுரம், திருவள்ளுவர் நகர், லட்சுமிபுரம், கருப்பசாமிநகர், பாலாஜிநகர், ருக்குமணிநகர் உள்ளிட்ட பகுதியினர் செல்வதற்கு வழியின்றி பல கிலோமீட்டர் சுற்றியே நகருக்கு சென்று வருகின்றனர். இப்பிரச்சனையில் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பொதுப்பதையை மீட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: