பொள்ளாச்சி,மே.12-
தரமாக கட்டப்படாமலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும் சிங்காநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி சீரழிந்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சிங்காநல்லூரில் அரசு உயர்நிலைப்பள்ளி 40 ஆண்டுகளாக உள்ளது. இடம் பற்றாக்குறையால் இந்த பள்ளிக்கு கடந்த 2000-ம் ஆண்டு 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் கட்டப்பட்டு 4 ஆண்டுகளிலேயே மேல் பகுதியில் இருந்து மழை நீர் ஒழுகி மாணவர்கள் வகுப்பறையில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டது. தரம் இல்லாமல் இந்த 2 கட்டிடங்கள் கட்டப்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.மழையால் ஒழுகிய 2 கட்டிங்களையும் இப்போது இழுத்து மூடிவிட்டார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடியால் தவிக்கிறார்கள்.
இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் இல்லை.குடிநீர் தொட்டி இருந்தும் பயன் இல்லை. பால்வாடி குழந்தைகள் வீட்டில் இருந்துதான் குடிநீர் எடுத்து வருகிறார்கள். சத்துணவு மையத்தில் சமையலுக்கு சுகாதாரமற்ற தண்ணீரையே பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கூறியதாவது:சிங்காநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2000-ம் ஆண்டில் கட்டப்பட்ட 2 கட்டிடங்களும் தரம் இல்லாததால் மேல் பகுதி சேதமாகி ஒழுகிவிட்டது. இது பற்றி சம்பந்தப்பட்ட கல்வித்துறையிடம் பல முறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. 40 ஆண்டுகளாக உள்ள பழைய கட்டிடம் நன்றாக உள்ளது. ஆனால் 4 ஆண்டுகளில் புதிய கட்டிடம் சேதமாகி விட்டது. தரமில்லாத சிமெண்ட், கம்பிகள் தான் இதற்கு காரணம். தரம் இல்லாமல் கட்டிடம் கட்டிய காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் இந்த பள்ளியில் தான் படித்தேன்.
என்னுடன் படித்த நண்பர்களை அழைத்து பள்ளியில் உள்ள குறைகளை பற்றி பேசி எங்கள் சொந்த செலவில் பள்ளியில் உள்ள குறைகளை சரி செய்து வருகிறோம். கட்டிட வேலைகளை கண்டிப்பாக பொதுப்பணித்துறை மட்டுமே செய்ய வேண்டும். எனவே பள்ளி குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: