திருப்பூர், மே. 11-திருப்பூர் அரிசிக்கடை வீதி பகுதியில் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் காவல் துறையினரின் ஆலோசனைப்படி செயல்படாமல், தன்னிச்சையாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்தனர். இதனால் சுமைப்பணித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் அரிசிக்கடை வீதி பகுதி சுமைப்பணித் தொழிலாளர்கள் சிஐடியு சார்பில் மே 10ம் தேதி வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இப்பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலையிட்டு பேச்சு நடத்தினார். இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சுமைப்பணித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்.
அதுவரை தொழிலாளர்கள் வேலை செய்யும்படி இருதரப்பினரிடமும் டிஎஸ்பி ராஜாராம் பேசி சமரசம் செய்து வைத்தார். இதையடுத்து தொழிலாளர்களும் சனிக்கிழமை பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தனர். முன்னதாக வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.காவல்துறை உயரதிகாரி சொன்னபடி வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை ஏற்பதாகக் கூறிய வியாபாரிகள் அதைப் பொருட்படுத்தாமல், வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வாருங்கள் என இறுமாப்பாக கூறிவிட்டனர்.இதையடுத்து தொழிலாளர்களும் வெள்ளியன்று தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்தனர். அரிசிக்கடை வீதியில் எந்த கடையிலும் வழக்கமாக நடைபெறும் சரக்கு ஏற்றி, இறக்கும் வேலை நடைபெறவில்லை. வியாபாரிகளின் இணக்கமற்ற அணுகுமுறை குறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலரிடம் சிஐடியு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் கூலி உயர்வுப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று திருப்பூர் கலாஸ் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்தார்.சனிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில் அதில் ஏற்படும் முடிவைப் பொருத்து தொழிலாளர்களின் போராட்டம் பற்றித் தீர்மானிக்கப்படும் என்று திருப்பூர் கலாஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சதாசிவம் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: