திருப்பூர், மே 11-கட்டுமானத் தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி மே 15ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதென திருப்பூர், நாமக்கல் மாவட்ட சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.தமிழகத்தில் செயலிழந்து கிடக்கும் நலவாரியப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், 60 வயது நிறைவடைந்த அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விபத்து மரண நிதி ரூ. 2லட்சம், இயற்கை மரண நிதி ரூ.1 லட்சம், திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மே 15ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து திருப்பூர் அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் சந்திப்பில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல், பாண்டமங்களம் மற்றும் வெப்படை ஆகிய நான்கு மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் எஸ்.நடராஜன் விடுத்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: