நீலகிரி, மே.11-மூப்பர்காடு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை கேட் அகற்றுவது தொடர்பான பேச்சுவார்தையை அதிகாரிகள் புறக்கணித்தனர். இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி கேட் அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மேலூர் ஊராட்சிக்குட்டபட்ட மூப்பர்காடு பழங்குடியினர் கிராம சாலையில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் சென்று வருவதை தடுக்கும் வகையில் சட்டவிரோதமாக சாலையை மறித்து கேட் (தடுப்பு) அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பினை மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வருகின்ற மே.17ந்தேதி ( வியாழக்கிழமை) அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குன்னூர் கோட்டாட்சியர் போராட்ட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு வெள்ளியன்று (மே.11) அழைத்திருந்தார்.
ஆனால்,கேட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தேயிலை தோட்ட அதிபர்கள் உள்ளிட்ட யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் அங்கு பேச்சுவார்த்தைக்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி, குன்னூர் பகுதி செயலாளர் ராமன்குட்டி, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி சுப்ரமணி, கவுன்சிலர் சேகர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர். பின்னர், வருகின்ற மே.17ந்தேதி மூப்பர்காடு பகுதியில் உள்ள தீண்டாமை கேட்டை அகற்றும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: