திருப்பூர், மே. 11-திருப்பூர் நிட் காம்பேக்டிங் தொழில் துறையின் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணக் கோரி மே 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள் அடையாள வேலைநிறுத்தம் செய்வதென்று வியாழனன்று நடைபெற்ற திருப்பூர் நிட்காம்பேக்டிங் சங்கத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.காம்பேக்டிங் சங்கம் சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்,சைமா, டீமா, டெக்மா ஆகிய பிரதான உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 26ம் தேதி கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.இதில் தொடர் மின் வெட்டு, மின் கட்டண உயர்வு, விறகு விலை உயர்வு, காம்பாக்டிங் மூலப்பொருட்கள் விலை உயர்வு, நிலுவைத் தொகைகளை வசூல் செய்ய முடியாத நிலை போன்ற காரணங்களால் கடந்த ஓராண்டில் மட்டும் 30 காம்பாக்டிங் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இந்த தொழிலுக்கு ஆபத்து வரும் காலங்களில் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூப்பிட்ட குரலுக்கு ஒன்று பட்டு உடன் இருந்து உதவி வருகிறோம். இன்றைக்கு காம்பாக்டிங் தொழில் மிகவும் சிரமத்திற்குள்ளாகி தவித்து நிற்கிறது. எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டுகிறோம். தொழில் நலன் கருதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தொகையில் 50 சதவிகிதத்தை உடனடியாகவும், மீதமுள்ள தொகையை ஒரு மாத கால அவகாசத்தில் பின் தேதியிட்ட வங்கி காசோலையாகவும் கொடுத்து உதவ வேண்டும். எதிர்வரும் காலங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை கணக்கை நேர் செய்து தரவேண்டும். தற்போது சங்கம் நிர்ணயித்துள்ள ரேட்டில் இருந்து 40 சதவிகிதம் உயர்த்தி தரவேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கைவிடப்பட்டது. ஆனால் உற்பத்தியாளர் சங்கங்கள் எதுவும் இக்கடிதத்துக்கு முறையான பதில் அளிக்கவில்லை.இந்த சூழ்நிலையில் நிட் காம்பேக்டிங் சங்கத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டம் தெற்கு ரோட்டரி ஹாலில் வியாழனன்று நடைபெற்றது. இதில் மூன்று நாட்கள் அடையாள வேலைநிறுத்தம் செய்வதென ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக நிட் காம்பேக்டிங் சங்கச் செயலாளர் வி.ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: