பொள்ளாச்சி மே. 11-பொள்ளாச்சியில் பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கழிப்பிடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொள்ளாச்சி திறமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி நகரில் புதிய பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்த பேருந்து நிலையங்களுக்கு பொள்ளாச்சி சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வால்பாறை, உடுமலை, கோவை, போன்ற பகுதிகளில் இருந்து படிப்பிற்காகவும், வேலை விஷயமாகமாகவும் நாளொன்றுக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்புக் கழிப்பிடம் இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து திறமை- மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமராஜ் கூறும்போது ; மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கழிப்பிடம் இல்லாத காரணத்தினால் தவழ்ந்து செல்லும் நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத் திறனாளிகள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறையையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய வசதியின்றி மாற்றுத்திறனாளிகள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் துன்பத்திற்குள்ளாகின்றனர். மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஒரு அங்கத்தினர் என்பதைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென கைபப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், சக்கர நாற்காலி, சக்கரம் பொருத்தப்பட்ட கதவு, வெர்ஸ்டன் கழிப்பறை, சுலபமாக பயன்படுத்தும் தண்ணீர் குழாய் ஆகியவற்றுடன் கூடிய சிறப்புக் கழிப்பிடங்களை உடனடியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: