கோவை, மே 11-திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கைதான ஐ.ஜி.பிரமோத் குமார் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவன அதிபர்களை மிரட்டி ரூ. 2. 93 கோடி வாங்கிய குற்றச்சாட்டில் ஐ.ஜி. பிரமோத் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை மேற்கொண்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராமசாமி, பிரமோத் குமாரை கோவை மத்திய சிறையில் வரும் 17ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு செவ்வாயன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து புதனன்று இரவு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், தான் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. யாக இருந்தபோது, பல குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளேன். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, என்னை புழல் சிறைக்கு மாற்றும்படி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் இதே கோரிக்கையை மனுவாக அளித்தார். இதுகுறித்து முருகேசன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.இந்நிலையில், பிரமோத் குமாருக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஐ.ஜி. பிரமோத் குமாருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் சென்னை அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுருத்தினர். இதனைத் தொடர்ந்து அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர், சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 4 போலீசார் அடங்கிய குழுவினர் ஐ.ஜி. பிரமோத் குமாரை வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜாமீன் மனு விசாரணை
பிரமோத் குமார் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழனன்று சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பிரமோத் குமார் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அமிதாப் சின்ஹா, ஐ.ஜி.பிரமோத் குமார் பாசி நிதி நிறுவன அதிபர்களிடம் பணம் பறித்ததற்கான எவ்வித ஆதாரமமும் இல்லை. மேலும், அவருக்கு நேரடியாகவோ,மறைமுகவாகவோ இவ்வழக்கில் எந்ததொடர்புமில்லை. சிபிஐ நாடகம் ஆடி, தவறாக தகவல்களை திரட்டி, பொய் வழக்கிட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் மனு வழங்க வேண்டும் என்றார்.பின்னர், வாதாடிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தேவேந்திரன், ஐ.ஜி. போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்கள் அதிக அதிகாரம் உண்டு. ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார். இவ்விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதால் அவர்களை மிரட்டி வழக்கை திசை திருப்பி விடும் நிலை உள்ளது. இதனால், வழக்கு விசாரணை முழுமையாக முடக்கப்பட்டு விடும். மேலும் ஜாமீன் கிடைத்தால், பிரமோத் குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசாமி ஜாமீன் மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக கூறினார்.
பாதிக்கப்பட்டோர் மனு
இந்நிலையில், திருப்பூர் பாசி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில், சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நாங்கள் பாசி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை இழந்து பல்வேறு மோசடிகளால் தவித்து வருகிறோம். எங்களது இந்த பரிதாப நிலைக்கு ஐ.ஜி. பிரமோத் குமாருக்கும் பெரும் பங்குண்டு. மேலும், அவர் பல்வேறு வகையில் இடையூறு செய்து பாசி நிறுவனத்தை செயல்படவிடாமல் முடங்கிப் போக காரணமாக இருந்துள்ளார். அதேபோல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, பிரமோத் குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வழக்கை சிபிஐ நியாயமான முறையில் விசாரித்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
ஐ.ஜி.பிரமோத் குமாரின் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பிரமோத் குமார் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பாசி நிறுவனத்தின் சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, ஐ.ஜி.பிரமோத் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.பாசி நிதி நிறுவன வழக்கு நாளுக்கு நாள் பல்வேறு கட்டங்களை எட்டி வருவதால் கோவை மக்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பின்னலாடை பிரிண்டிங் கட்டணம் 30 சதவிகிதம் உயர்வு
திருப்பூர், மே 11-பின்னலாடை பிரிண் டிங் கட்டணத்தில் 30 சதவிகித உயர்வை டெக்பா சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது: பெட் ரோல் டீசல் விலைஉயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு, சேவை வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், தொழிலை பாதுகாத்திட வும், பின்னலாடை பிரிண் டிங் கட்டணத்தை 30 சத விகிதம் உயர்த்துவது என்று டெக்பா சங்கம் தீர்மானித் துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply