கோவை, மே. 11-கோவை துடியலூரில் இந்து முன்னணியியை சேர்ந்தவர், தலித் மக்களுக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தனது வீட்டை கட்டியுள்ளார். மேலும் கோவில் நிலத்திலேயே தனது வீட்டிற்கு பாதை அமைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித்மக்களைஅடியாட்கள் துணைகொண்டு கோவில் கேட்டை, உடைத்து அடவாடியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை துடியலூரில் உள்ள அம்பேத்கர் நகர் தலித் மக்களுக்கு சொந்தமான சின்னகுமரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலை துடியலூரை சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தலித் மக்கள் தங்களது குலதெய்வமாக காலங்காலமாக வணங்கி வருகின்றனர். இக்கேவிலுக்கென்று சுமார் 26 சென்ட் காலியிடமும் உள்ளது. இந்த காலியிடத்தை இந்து முன்னணியை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் ஆக்கிரமித்து மாடியுடன் கூடிய பெரிய வீட்டை கட்டியுள்ளார். மேலும் கோவில் நிலைத்தை ஆக்கிரமித்து விட்டிற்குள் கார் சென்று வரும் வகையில் பாதை அமைக்க முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து கோவில் நிர்வாகத் தரப்பினரை அணுகி பணம் தருவதாகவும், அதற்கு மாற்றாக கோவில் நிலத்தை பாதைக்காக தனக்கு எழுதிதர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். இதற்கு அப்பகுதி தலித் மக்களும் கோவில் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் ஏற்கனவே ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள கோவில் நிலத்தை கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாத்துரை கோவை 1 வது வார்டு பாஜக கவுன்சிலர் வத்சலாஇளங்கோவன் தலைமையில் சில சமூக விரோதிகளை அழைத்து வந்து தலித்மக்கள் குலதெய்வமாக வணங்கி வரும் சின்னகுமரய்யன் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, கோவிலில் இருந்த பெயர் பலகையும் நொறுக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த தலித் மக்களை சாதியை சொல்லி இழிவாக பேசியதோடு மிரட்டியும் உள்ளனர். இதையடுத்து கோவில் நிர்வாகத்தார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தலித் மக்கள் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கோவிலை அடித்து நொறுக்கி, சாதியை சொல்லி இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டிஆர்ஒ தலைமையில் இது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கேசவமணி, மற்றும் ஜி.ரெங்கநாதன், என்.பாலமூர்த்தி, என்.நாகேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அப்பகுதிக்கு நேரில் சென்றது. பின்னர் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை செய்ததோடு பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இந்து முன்னணி மதவெறி கும்பலுக்கு எதிராக, தலித் மக்களோடு கரம் கோர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கட்சியும் நிற்கும் என்று தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: