அம்பேத்கர் குறித்த கேலி சித்திரம்: ரயில் மறியல் – ஆதித்தமிழர் பேரவையினர் கைது
கோவை, மே. 11-சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் அம்பேத்கர் குறித்த கேலி சித்திரம் இடம் பெற்றுள்ளதைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 23 பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் அம்பேத்கர் குறித்த கேலி சித்திரம் இடம் பெற்றுள்ளது. இதைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் கோதவாடி ராஜன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
இதேபோல் ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்றதாக ஆதித்தமிழர் பேரவையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் ஒருங்கிணைந்த விவசாய முறை அறிமுகம்
கோவை மே 11-திருப்பூரில் உள்ள விளிம்பு நிலை விவசாயிகளின் வருமானத்தை நிலை நிறுத்தும் வகையிலும், விவசாயத்தின் தரத்தை உயர்த்தும் வகையிலும் திருப்பூரில் ஒருங்கிணைந்த விவசாய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட விவசாயத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் தெரிவிக்கையில், இந்த ஒருங்கிணைந்த விவசாய முறையில், பிரதானமாக செய்யப்படும் விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் கோழிப்பண்ணை, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காடுவளர்ப்பு, ஆடு, மாடு வளர்த்தல் மற்றும் பட்டுப்பூச்சி வளர்த்தல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், விவசாயம் செழுமை பெறும்.மேலும், விவசாயிகளுக்கு, தங்களது வருமானத்தைப் பெருக்கும் வகையில் சிறந்த முறையில் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு அரசு அளித்து வரும் மானியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்படும். திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலமுடைய விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால், காளான், காய்கறிகள், தேன் மற்றும் பட்டுப்பூச்சிக் கூடுகள் உள்ளிட்டவற்றை விற்பதன் மூலம் வருடம் முழுவதும் தங்களது வருமானத்தை நிலையாக வைத்திருக்க முடியும்.மேலும்,அனைத்து பருவகாலங்களுக்கான விவசாயத்தை மேற்கொள்வதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால், விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாறுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: