கோவை, மே. 11-ஐ.ஜி.பிரமோத் குமார் ஜாமீன் மனு வெள்ளியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.திருப்பூர் பாசி நிறுவன வழக்கில் அதன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் ஐ.ஜி. பிரமோத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதற்கிடையே, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஐ.ஜி. பிரமோத் குமார் தனக்கு சிறையில் ஆபத்திருப்பதகாக கூறி ஜாமீன் வழங்கவேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாசி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. பின்னர் நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வெள்ளியன்று வழங்குவதாக அறிவித்தார்.இந்நிலையில், வெள்ளியன்று பிரமோத்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிபதி ராமசாமி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனையில் அனுமதி
ஐ.ஜி.பிரமோத் குமார் தான் ஒரு இதய நோயாளி எனக் கூறியதையடுத்து அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றுவது சிறந்தது என கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வியாழனன்று இரவு கோவை சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு ஐ.ஜி.பிரமோத் குமார் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். அவர்களிடம் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக பிரமோத் குமார் கூறினார். உடனே அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: