சேலம், ஏப். 25-சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.சேலம் நாட்டாமை கழக கட்டிட முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட தலைவர் தங்வேலன், நாமக்கல் மாவட்ட தலைவர் சுப்ரமணி, தர்மபுரி மாவட்ட தலைவர் மலை, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் துரைராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் சத்துணவு திட்டத்தில் பணியாற்றக்கூடிய அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து, ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியத்தினை வழங்க வேண்டும். சட்டபூர்வமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் உணவினை தரமானதாக, விலைவாசி உயர்வுக்கேற்பவும் வழங்க வேண்டும். சமையல் உதவியாளர்களை சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சேலம் மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயக முறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறை கைது செய்துள்ளதை சிஐடியு மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
கோவை:
கோவையில் புதனன்று வெளியூர் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத் தலைவர் எம்.இன்னாசி முத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சந்திரன் துவக்கவுரை ஆற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் துரை, கருணாநிதி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் டி.சிவஜோதி, மகளிர் குழு நிர்வாகி மயிலம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: