பொறியாளர்பென்னிகுயிக் மணிமண்டபம்
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
சென்னை, ஏப்.25-முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பெருமைக்குரியவரான ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி வைத்தார்.தேனி – குமுளி நெடுஞ்சாலையில், லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் இந்த மணிமண்டபம் அமைகிறது. இங்கு பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலையும் நிறுவப்படுகிறது.இதற்கான அடிக்கல்லை சென்னை தலைமைச் செயலகத்தில் புதனன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா நாட்டி வைத்தார்.பென்னிகுயிக்கின் மணிமண்டபம் 2500 சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ளது. இதற்காக ஏற்கனவே ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பென்னிகுயிக்கின் பேரன் அழைக்கப் படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
———-
ரூ.34 கோடி செலவில்மீன் தொழில்நுட்ப நிலையம்
சென்னை, ஏப். 25 -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 34கோடி ரூபாய் மதிப்பில், மீன்வளத் தொழில்நுட்ப நிலையம் அமைக்கப்படும். இதற்காக 2012-13 நிதியாண்டில் 7 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் கூறினார்.சட்டப்பேரவையில் தமது துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கள் வருமாறு:தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்படும் வெளிப்பொருத்தும் இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 250 லிட்டராக அதிகரிக்கப்படும்.பவானிசாகர், மேட்டூர் அணை, மணிமுக்தா அணை, கோமுகி அணை, வீடூர் அணை, மணிமுத்தாறு, கிருஷ்ண கிரி அணை, ஆழியார், அமராவதி, சாத்தனூர், திருமூர்த்தி நகர், பாலார் பொருநதலாறு ஆகிய இடங்களில் உள்ள மீன் விதைப்பண்ணைகளில் 60 கோடி ரூபாய் செலவில் மீன் விதைப்பண்ணைகள் அமைப்பதோடு, மீன்பண்ணை களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.இளங்கலை, மருத்துவம், பொறியியல், கால்நடை மருத் துவம், விவசாயம், மீன்வளம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசே ஏற்கும்.
——
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மச்சாவு
நியூயார்க், ஏப். 25-ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நிகில் கர்ணம். அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் படித்து வந்தார். அவர் அங்கு ஒரு வீடு எடுத்து தனியாகத் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில் நிகிலின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அக்கம்பக்கத் தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது நிகில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நிகிலின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 19ம் தேதி பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சோஷாத்ரி ராவ்(24) சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
————-
கூடங்குளம் மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும் -பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
சென்னை, ஏப். 25-கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப் படும் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்தின் தேவைக்கே ஒதுக்க வேண்டும் என்று முன்பு கோரி இருந் தேன். எனது இந்த கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பு வதாக மார்ச் 31ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.ஆனால் அது பற்றிய விவரம் இதுவரை கிடைக்க வில்லை. 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, முதல் யூனிட்டில் அடுத்த சில நாட்களில் அணு எரி பொருள் நிரப்பும் பணி நடைபெற இருப்பதாக நான் அறி கிறேன். அப்படி எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கி முடிவடைந்துவிட்டால், அடுத்த 20 நாளிலோ அல்லது சிறிது நாட்களிலோ முதல் யூனிட்டில் இருந்து மின் உற்பத்தி தொடங்கிவிடும்.இந்த பின்னணியில் முந்தைய எனது கோரிக்கையை மீண்டும் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். எங்கள் மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தேவையான நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: