கோவை, ஏப். 18-மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் மீது மறைமுக வரி விதிக்காமல், பெருநிறுவனங்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என சுந்தராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்திப் பேசினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு தாலுகா குழு சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சுந்தராபுரத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாலுகாக் குழு உறுப்பினர் ஆர்.சபாபதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலகுழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவரிடம் கட்சி நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,தற்போது ஏறியுள்ள கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உணவு, வீட்டு வாடகை, கல்வி ஆகிய செலவுகளை எதிர்கொள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கோழிக்கோட்டில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் ரூ. 45 ஆயிரம்கோடி அளவிற்கு மறைமுக வரிகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த அரசு பெருநிறுவனங்களுக்கான நேரடி வரியை ரூ 5 ஆயிரம் கோடி அளவிற்கு மட்டுமே விதித்துள்ளது. எனவே, பெருநிறுவனங்களுக்கான நேரடி வரியை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராகவும், கருணாநிதியின் குடும்பக் கொள்ளைக்கு எதிராகவும் கூட்டணி அமைத்தோம். இந்த அணி பலமாக இருந்ததால் அதிமுக தலைமையிலான அரசு அமைந்தது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடிக்கு அதிமுக அரசால் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இப்போது தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் இயக்கினால் ரூ.14 வரை உற்பத்தி செலவு அதிகமாகிறது.
எனவே மின்தடையை நீக்கவும் வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரத்தை பெறவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று எட்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் காவல்துறை 24 கொலை செய்துள்ளது. இதில் லாக் அப் சாவுகள் மட்டும் 12. எனவே, காவல்துறையை வளர்த்திவிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இவ்வாறு அவர் பேசினார்.இந்நிதியளிப்புக் கூட்டத்தில் சிபிஎம் தெற்கு தாலுகா செயலாளர் எஸ்.கருப்பையா, தாலுகா குழு உறுப்பினர்கள் பி.ரவிச்சந்திரன், டி.பெருமாள் சாமி, வி.சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.இளங்கோவன் ஆகியோர் பேசினர். முத்துராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.