கோவை, ஏப். 18-மத்திய அரசு, தனது மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் பணக்கார்களுக்குப் பல்லக்குத் தூக்கும் வேலையையும் பாமர மக்களுக்கு பாடை கட்டும் கொடுஞ் செயலையும் செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி கடும் குற்றம் சாட்டினார்.கோவை கணபதிபுதூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு மற்றும் கணபதிபுதூர் கட்சிக்கிளைகள் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்புக் கூட்டம் நடந்தது. நகரக்குழு சார்பில் பொதுமக்களிடம் வீடுவீடாகச் சென்று வசூலிக்கப்பட்ட நிதி ரூ.61 ஆயிரத்து 110-ஐ பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றும் போது உ. வாசுகி மேலும் பேசியதாவது:
இன்று நமது நாட்டில் விலை உயர்வு பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது. விலை உயர்வு தாக்குதலிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்று மத்திய ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை. எதிர்மறையாக விலைகளை மேலும் உயர்த்தும் வகையில் பெட்ரோல் விலையை உயர்த்தியும், உணவுப் பண்டங்களின் மீதான வர்த்தகச் சூதாட்டத்தை அனுமதித்தும் கொடுஞ்செயல் செய்கிறது. கடந்த மத்திய பட்ஜெட்டில் கூட எரிபொருள் மானியத்தை 25 ஆயிரம் கோடியும், உரமானியத்தை ரூ.6 ஆயிரம் கோடியும் குறைத்துள்ளது. மாறாக, வசதிபடைத்தோருக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலும் வரிச் சலுகையாக மட்டும் ரூ.5 லட்சம் கோடிகள் தருகிறது. எனவே இந்த அரசாங்கத்தின் பார்வை அணுகுமுறை என்பது பணக்காரர்களுக்கு பல்லக்குத் தூக்குவதாகவும், பாமரனுக்கு பாடை கட்டுவதாகவுமே உள்ளது. மேலும் வறியவர்களின் கணக்கைக் குறைத்துக்காட்டி, மோசடி வேலையிலும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. மற்றொரு வழியில் அரசு கஜானாவுக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் முறைகேடுகளால் சில தனி நபர்களின் சட்டைப் பைகளை நிறைக்கிறது. இதையெல்லாம் வலுவாக தட்டிக் கேட்கும் நிலையில் பிரதான எதிர்க் கட்சியான பாஜக இல்லை. அதன் முதல் அமைச்சர்கள், அமைச்சர் பெருமக்களும் ஏராளமான ஊழல் வழக்குகளில் சம்பந்தப்படுகின்றனர். இன்னொரு புறத்தில் பாஜக அமைச்சர்கள் சட்டசபை விவாதத்தின்போதே செல்போன்களில் ஆபாசப்படங்களைப் பார்த்த விவகாரம் கர்நாடக, குஜராத்தில் அரங்கேறி இருக்கிறது. எனவேதான் உழைக்கும் மக்களுக்காக எப்போது அர்ப்பணிப்போடு போராடும் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளுமே உண்மையான மாற்றாக விளங்க முடியும். மார்க்சிஸ்ட் கட்சிக்காக தொடர்ந்து ஆதரவையும் நிதியையும் அளித்துவரும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்திற்கு விஸ்வநாதன் தலைமைவகித்தார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். புனிதா, வடக்கு நகரச் செயலாளர் என். ஆர். முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். அமுதா மற்றும் பி. ராஜன், ஆர். ஹரிஹரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிதியளிப்புக் கூட்டத்தில் கட்சியின் முன்னணி ஊழியர்களும், திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.