ஈரோடு : அனுமதியின்றி இயங்கிய
5 சாயப்பட்டறைகள் இடிப்பு
ஈரோடு, எப். 18-ஈரோடு எஸ்.எஸ்.பி நகரில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 சாயப்பட்டறைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மாநிலம் முழுவதும் அனுமதியின்றி, விதிமுறைகள் மீறி இயக்கப்படும் சாயப்பட்டறைகளை இடிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அனுமதியின்றி செயல்பட்ட 114 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் மாணிக்கம்பாளையம், எஸ்.எஸ்.பி., நகர், பனங்காட்டு தோட்டம், சீனாங்காடு பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாகவும், அதில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர், அதே பகுதியில் உள்ள ஓடையில் கலப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், சுற்றுச்சூழல் பொறியாளர்கள், உள்ளிட்டோர் சோதனை செய்தனர். அப்போது எஸ்.எஸ்.பி., நகர், பணங்காட்டுத்தோட்டம், சீனாங்காடு ஆகிய பகுதியில் 5 சாயப்பட்டறைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த சாயப்பட்டறைகளை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் மீண்டும் இப்பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்குவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
———-
குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை பொதுமக்கள் எதிர்ப்பு
நாமக்கல், ஏப். 18-ஜேடர்பாளையம் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையிட்டனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள், பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன. இந்நிலையில், பேருந்து நிலையத்துக்கு அருகே மதுக்கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் அந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கடைக்கான இடத்தையும் தேர்வு செய்துள்ளனர். அப்பகுதியில் மதுக்கடை அமைந்தால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறுகள் ஏற்படும். அதனால் சட்டம், ஓழுங்கு பிரச்சனை எழும் என்று ஜேடர்பாளையம் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரனிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.
————
மண்ணெண்ணெய் வழங்கக்கோரி ரேசன்கடை முற்றுகை
தம்மம்பட்டி, ஏப். 18-தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டனர். தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் ஏழு ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் கடை எண்- 1ல் 890 கார்டுதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்குகின்றனர். இந்த கடையில் மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் 600க்கும் குறைவான கார்டுதாரர்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டனர்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட ரேசன்கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. அரசு ஒதுக்கிய முழு அளவு மண்ணெண்ணெயை மாதந்தோறும் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: