உடுமலை, ஏப். 18-ஒட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அபராதத்தொகை செலுத்தி வருவதற்குள், காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் சக்கரம் உள்ளிட்ட பாகங்கள் திருட்டு போயியுள்ளது உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி முடிந்து இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உடுமலை காவல்துறை உதவி ஆய்வாளர் கோவர்தனாம்பிகை தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சோதனையின் போது, அச்சாலையின் வழியே வந்த ரமேஷின் வாகனத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் ரமேஷ் ஒட்டுநர் உரிமம் இல்லாமலும், மது அருந்தியும் வாகனம் ஓட்டி வந்துள்ளதை காவலர்கள் கண்டறிந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும். அவர் ஓட்டிவந்த வாகனத்தை கைப்பற்றி, நீதி மன்றத்தில் அபராதத் தொகை செலுத்தி பின் பெற்றுக் கொள்ளுமாறு கூறி காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, உடல் நலக்குறைவு மற்றும் பண நெருக்கடியால் அபராதத் தொகையை செலுத்த ரமேஷ் தாமதித்துள்ளார். இந்நிலையில் வாகனத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்( ஏப்.17) ரமேஷ் ஆஜாராகி அபராதத் தொகையை செலுத்தி உள்ளார். பின்னர். தன்னுடைய வாகனத்தை பெற்றுக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி. அவரது இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரம் திருடப்பட்டிருந்தது மட்டுமின்றி, பல்வேறு பாகங்கள் காணாமல் போய் எழும்புக்கூடாய் வாகனம் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தின் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார் ரமேஷ். இதற்கு காவல்துறை அதிகாரிகள் நினைத்த நேரத்திற்கு அபராதத் தொகை செலுத்தி வந்து வாகனத்தை கேட்டால் இவ்வளவுதான் மிஞ்சும் என அலட்சியமாக தெரிவித்துள்ளனர். மேலும். காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பாகங்கள் திருடப்பட்டு குறித்து மேற்கொண்டு ஏதேனும் பேசினால் தேவையற்ற விளைவுகளை சந்திக்க வேண்டும் என அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதனால், வாகனத்தின் பாகங்கள் காணாமல் போனது மற்றுமின்றி, நியாயம் கேட்டதற்காக காவலர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி உள்ளதே என எண்ணி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ரமேஷ் அவ்விடத்தை விட்டு நகர்ந்துள்ளார். பொதுமக்களின் உடமைகள் திருட்டுப் போனால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். ஆனால் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட வாகனமே திருட்டுப் போனால் யாரிடம் முறையிடுவது என அப்பகுதியினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.