திருப்பூர், ஏப். 18-அவிநாசி மேற்கு ரத வீதியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த, சுமார் 15 செண்ட் அளவுள்ள கொல்லர் மடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கொல்லர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கொல்லர் நலச் சங்கத்தலைவர் பி.சுப்பிரமணியம் தலைமையில் சுமார் ஐம்பது கொல்லர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை திங்களன்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மேற்கு ரத வீதியில் உள்ள 300 ஆண்டு பழமையான கொல்லர் மடம் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள் கொல்லர் சங்கத்திடம் இருக்கிறது. இதன்படி அந்த கொல்லர் மடத்தை கொல்லர் நலச் சங்கத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவிநாசி வட்டாட்சியரிடம் பி.சுப்பிரமணியம் தலைமையிலான சங்கத்தார் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் முறையிடும் படி வட்டாட்சியர் கூறியிருக்கிறார்.
எனவே கோட்டாட்சியரிடமும், அதன் பிறகு மாவட்ட வருவாய் அலுவலரிடமும் கொல்லர் மடம் குறித்து அவர்கள் முறையிட்டனர். தற்போது அந்த இடத்தில் தனியார் ஒருவர் உணவகம் நடத்தி வருவதாகவும், அவரிடம் அந்த இடத்துக்கு உரிய சான்றாதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கொல்லர் சங்கத்தார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட தனியாரிடமும் எழுத்துப்பூர்வமாக தமக்கு உரிய இடம் இல்லை என்று வருவாய்த்துறையினர் ஒப்புதல் பெற்றிருக்கின்றனர்.இதைத் தொடர்ந்து மேற்படி கொல்லர் மடத்தை வழங்கும்படி இவர்கள் கோரினர். பூர்வீகத்தில் அந்த மடத்தை வேறொருவர் மேற்பார்த்து உள்வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார். காலப் போக்கில் அந்த இடம் யாருக்கு உரியது எனத் தெரியாமல் போனது. தற்போது ஆவணங்கள் ஆதாரத்துடன் உண்மையான விபரம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கொல்லர் சங்கத்தார் வலியுறுத்தினர். ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் பதிலளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.