கோவை, மார்ச் 6- இலங்கை அதிபர் ராஜபக்சேவை இன அழிப்பு போர்க்குற்றவாளியாக அறிவித்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.கோவை மத்திய பேருந்து நிலையம் எதிரில் செவ்வாயன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஐ கோவை மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். 2009 மே.மாதம் இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப்போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை பொறுப்பாக்கி இன அழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவித்திடவும், ஒரு சுயேட்சையான ஐ.நா அமைப்பின் அதிகாரப் பூர்வ விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமெனக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதிமுக திடீர் ஆதரவுஉண்ணாவிரதம் துவங்கியவுடன் சிறிது நேரத்திலேயே அஇஅதிமுக சார்பில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி, த.மலரவன் எம்எல்ஏ, சேலஞ்சர்துரை எம்எல்ஏ ஆகியோர் பந்தலுக்கு வந்தனர்.
பின்னர் போராட்டத்தை வாழ்த்திப் பேசிய த.மலரவன் எம்எல்ஏ காலையில்தான் அஇஅதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா போராட்டத்தில் பங்கேற்ற உத்தரவிட்டதாகவும் எனவே தாங்கள் வந்ததாகவும் தெரிவித்தார். போராட்டத்தில் பெரியார் திராவிடக்கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், கவிஞர் புவியரசு உள்ளிட்டோரும் சிபிஐ சார்பில் கே.புருஷோத்தமன், பழனிச்சாமி, கே.ஜி.ஜெகநாதன், கல்யாணசுந்தரம், தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply