உடுமலை, மார்ச் 6-உடுமலை அடுத்துள்ள எலையமுத்தூர் பகுதியில் தாய்கோழி வளர்ப்பு நிறுவனமான எவியாஜென் என்ற பன்னாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் எத்தகைய தொழிலாளர்கள் நலச்சட்டமும் அமல்படுத்தப்படுவதில்லை. மேலும் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. மிகக்குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை கசக்கி பிழியும் நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து சிஐடியு சங்கத்தை உருவாக்கினார்கள். இதனால் அத்திரமடைந்த நிர்வாகம் சங்கத்தில் இணைந்த தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எவியாஜென் பன்னாட்டு நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும். சங்கம் அமைத்ததற்காக நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால். எவியாஜென் நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததுடன் பேச்சுவார்த்தைக்கும் வரமறுத்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு சங்க நிர்வாகி குமரகுரு தலைமையில் திங்களன்று நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணசாமி, ஜெகதீசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா செயலாளர் சி.சுப்பிரமணியம், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ரங்கநாதன், கனகராஜ், அன்பழகன் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply