திருப்பூர், மார்ச் 6-தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இதனால் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. குறிப்பாக மாணவகளுக்கு தேர்வு நடைபெறும் இக்காலத்தில் தொடர் மின்வெட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் மின்வெட்டால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே தொடர் மின்வெட்டை சரிசெய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மின்சாரத்தை சீராக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக வேலம்பாளையம் அண்ணா காலையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க கிளைத்தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல், மாதர் சங்கத்தின் ச.குணசுந்தரி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் வி.பி.சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: