தனது சொந்த அரசுக்கு எதிராகவே முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராடிக் கொண்டிருக்கிறாரா? இதுதான் கடந்த சில நாட்களாக மேற்குவங்க மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும்.பிப்ரவரி 28 ஆம் தேதி யன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் இணைந்து நடத்தினார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கூட இதில் பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்த நிலையில், இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்த வேலைநிறுத்தம், மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை முழு அடைப்புப் போராட்டமாகவே இருந்தது. இந்த மாபெரும் வெற்றியைப் பொறுக்க முடியாத திரிணாமுல் காங்கிரசார், வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாதவ்பூர் பகுதிக்குழு அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகப் போய்விட்டது என்பதற்கு இதைவிடப் பெரிய எடுத்துக்காட்டு இருக்க முடியாது. காவல்துறையில் இருக்கும் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் என்பவர்தான் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். அவர் அதில் ஈடுபட்டிருந்தார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைப் படமெடுக்க பத்திரிகையாளர்கள் முனைந்தனர். அப்போது பத்திரிகையாளர்களையும் தாக்கினர். தாரக் தாசும் அந்த வன்முறையில் நேரடியாக இறங்கியிருந்தார். இது குறித்து துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வன்முறை வெறியாட்டத்தில் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் ஈடுபட்டது உண்மைதான் என்பது நிரூபணமானது. அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டது என்றும், பொய்யான செய்திகளைப் பத்திரிகையாளர்கள் பரப்புகிறார்கள் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இத்தனைக்கும் எந்தக் காவல்துறை விசாரணை நடத்தி தாரக் தாஸ் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் என்று சொல்லி அவரைத் தற்காலிக நீக்கம் செய்துள்ளதோ, அந்தத் துறைக்கு மம்தா பானர்ஜிதான் அமைச்சராவார். அவர் இதோடு நிற்கவில்லை. இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த சதிக்கு எதிராக பேரணியும் நடத்தியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களோடு சேர்ந்து கான்ஸ்டபிள் தாரக் தாஸ் நடத்திய வன்முறை வெறியாட்டம், பத்திரிகையாளர் பாதிப்பு, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல், துறை விசாரணை, குற்றம் நிரூபணம் என்று அனைத்துமே மார்க்சிஸ்ட் கட்சியின் சதி என்று மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் மட்டுமல்ல, பார்க் தெரு, கட்வா மற்றும் ஃபல்டா ஆகிய மூன்று இடங்களில் பாலியல் பலாத்காரக் கொடூரங்கள் நிகழ்ந்தன. இந்த மூன்றிலும் பலாத்காரமே நடக்கவில்லை என்று தடாலடியாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துவங்குவதற்கு முன்பாகவே “சிபிஎம் சதி” என்ற பல்லவியை அவர் பாடினார். விசாரணைகளுக்குப்பிறகு மூன்று சம்பவங்களிலும் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இவற்றிலும் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைதான் விசாரணை செய்து முடித்திருக்கிறது. ஆனாலும் தனது பொய்ப்பிரச்சாரத்தை அவர் நிறுத்தவில்லை. அவசரப்பட்டுக் கருத்து தெரிவிக்காமல் தனக்குக் கீழே இயங்கும் காவல்துறை விசாரித்த பிறகு பேசியிருக்கலாமே என்று சொந்தக் கட்சிக்காரர்களே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவருக்கு ஆதரவாக இருந்தவர்களே விலகி நிற்கத் துவங்கியுள்ளனர். பிரபல வழக்கறிஞரான அருனவ கோஷ் என்பவர் கூறுகையில், காவல்துறை விசாரித்து வரும் விவகாரங்கள் மற்றும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தெருக்களில் முதலமைச்சரே பேரணி நடத்துவதால் என்ன பலன்? அவருடைய பதவிக்கு அது அழகு சேர்க்கவில்லை. அவருக்கென்று பல வேலைகள் உள்ளன. அவற்றை அவர் பார்ப்பது நல்லது என்கிறார். இத்தகைய கருத்துக்கள்தான் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உலாவிக் கொண்டிருக்கின்றன. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகச் செய்தி வெளியிட்டு வந்த பல பத்திரிகைகள் கூட “தனக்கெதிராகவே போராட்டம் நடத்துகிறார் மம்தா”(டைம்ஸ் ஆப் இந் தியா) என்று வர்ணித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: