பொள்ளாச்சி, மார்ச் 6-சாலைப்பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் போக்கினை கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் பொள்ளாச்சி கோட்ட 4வது மாநாடு கோட்டத்தலைவர் வி.சின்னமாரிமுத்து தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. முன்னதாக, இருநூற்றுக்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட பேரணி யூனியன் ஆபீஸ் முன்பிருந்து துவங்கி மாநாட்டு அரங்கமான வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தை வந்தடைந்தது.
இம்மாநாட்டில் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஏ.அம்சராஜ், மாநில பொதுச் செயலாளர் மா.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். அட்டகட்டி, வால்பாறை பகுதிகளில் பணிபுரியும் சாலைப்பணியாளர்களுக்கு தலைகவசம். கையுரை, மலைகோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும்.
பணிநீக்க காலத்தில் கூட்டுறவு கடனுக்கான வட்டியினை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் கோட்டத் தலைவர் வி.சின்னமாரிமுத்து. செயலாளராக பி.பாலசுப்ரமணியன், பொருளாளராக எம்.அய்யாசாமி மற்றும் எம்.ஜான்பாட்சா, கே.வெள்ளிங்கிரி, எஸ்.ஜெகநாதன், டி.சந்திரபோஸ் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: