கோவை, மார்ச். 5-பொது வேலை நிறுத்ததின்போது ஆட்டோக்களை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.பொது வேலை நிறுத்ததின்போது கோவை காந்தி மாநகர் பகுதியில் ஆட்டோக்களுக்கு தீ வைத்தனர்.
தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுக்குழுவின் தலைவர் பி.கே.சுகுமாரன்,செயலாளர் பி.வெங்கட்ராமன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 28-ந்தேதி மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக தொழிலாளர் மற்றும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது. கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழுவும் இந்த வேலை நிறுத்ததுக்கு ஆதரவு தெரிவித்தது.
இதை எதிர்த்து ஆளும் கட்சியில் உள்ள தொழிற்சங்கம் எதிர்ப்பு போஸ்டர்களை அடித்து ஆட்டோக்கள் ஓடும் என்று பிரச்சாரம் செய்தது.அன்றைய தினம் பீளமேடு காந்திமாநகர் பகுதியில் ஆயுதங்களுடன் வந்த ஆளூங் கட்சியினர் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை வேலைநிறுத்ததில் பங்கேற்க கூடாது என்று மிரட்டினார்கள். அப்போது ஆயுதங்களுடன் வந்தவர்கள் ஆட்டோக்களை அடித்து உடைத்து தீவைத்து கொளுத்தினார்கள் மேலும் பாதிக்கப்பட்ட ஓட்டுனர் சங்கரின் வீட்டுக்கு சென்று மிரட்டி உள்ளனர்.இச்சம்பவத்தில் காவல்துறை ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் 9பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
இது பற்றி நியாயமான விசாரணை நடத்தி ஆட்டோக்களை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் எவ்விதமான அச்சமும் இல்லாமல் தொழில் நடத்த வழிவகை செய்ய வேண்டும். மீண்டும் ஸ்டேண்டு அமைத்திட அனுமதி வழங்கவேண்டும் என்றுதெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.