மீசையை முறுக்கிக் கொண்டு, மன்னரைப் போல விறைப்பாக அமர்ந்து கொண்டிருக்க பழங்குடியினப் பெண்கள் சிலர் அவரது கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அருகில் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கியமான தலைவர்களும் தங்களின் முறை எப்போது வரும் என்று காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சில சாதுக்கள் மட்டும் முகம் சுழித்தனர்.
அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட வெளிநடப்பு செய்வது போல் நகர்ந்தனர். வெளியே சென்ற பிறகுதான் அவர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் நடந்தது அயோத்தியாவில்தான். கம்பீரமாக அமர்ந்து கொண்டு தனது கால்களைப் பழங்குடிப் பெண்கள் கழுவுவதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் மதவெறிக் கும்பலான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்.
பழங்குடியினப் பகுதிகளில் தங்கள் மதவெறிப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல அண்மைக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீண்டும் தாய் மதத்திற்கு பழங்குடி மக்களை அழைத்து வருகிறோம் என்று கூறி பல்வேறு முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கலவர பூமியாக மாற்றப்பட்டிருக்கும் அயோத்தியாவில் பயிற்சி முகாம் நடந்துள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்க வந்திருந்தார்.
அவரைத் திருப்திப்படுத்த நினைத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராமர் ஜானகி கோவிலில் வைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த பழங்குடிப் பெண்களை தலைவர்களின் கால்களைக் கழுவி விடச் செய்தனர். சாதுக்கள் எதிர்ப்புஅதிருப்தியுற்று வெளியேறிய சாதுக்களில் சிலர், இதைப் பெரும்பாவம் என்று வர்ணித்தனர். தாங்கள் சொல்வதே சட்டம் என்று நடந்து கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உடனடியாகப் பதில் தந்தனர்.
பழங்குடியினத்தினரில் பாரம்பரியம் இதுதான் என்று ஒரேபோடாகப் போட்டார் அவர்களின் செய்தித்தொடர்பாள ராம் மாதவ். விஸ்வ இந்து பரிசத்தின் அமைப்புப் பொதுச் செயலாளரான தினேஷ் சந்திரா ஒரே படி மேலே போய்விட்டார். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று இதை யாராவது கருதினால், அவர்களுக்கு பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் பற்றிய ஞானம் இல்லை. மோகன் பாகவத் பழங்குடியினரோடு இணைந்து பழகினார். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். கால்களைக் கழுவிவிடுவது ஒன்றும் புதிதல்ல என்றெல்லாம் கூறினார்.
கால்களைக் கழுவி விட்ட பெண்கள் அஸ்ஸாம் மற்றும் ஜார்க்கண்டு ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பழங்குடியினத்தவராவர். ராமாயணக் கதைகளை எப்படி சொல்வது என்பதற்கான பயிற்சி தருகிறோம் என்று அவர்களை அழைத்து வந்திருந்தார்கள். பழங்குடியினப் பெண்களை இவ்வாறு நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று சாதுக்களில் ஒரு பகுதியினர் கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அயோத்தியாவில் உள்ள வைகுந்த பவனத்தின் தலைமைப் பூசாரியான புருசோத்தமாச்சாரி கூறுகையில், அயோத்தியாவில் இத்தகைய பழக்கவழக்கம் எதுவும் கிடையாது.
மனிதர்களுக்கு இத்தகைய அதிகாரம் எதுவும் கிடையாது. அதனால் இதை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருத வேண்டும் என்று சாடினார். விஸ்வ இந்து பரிசத்தின் வேதாந்தியோ, உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் மோகன் பாகவத்துதான் தலைவராவார். அதனால் அவரது கால்களைக் கழுவுவதில் தவறில்லை என்கிறார். அவரது கருத்துக்கு பல்வேறு மடத்தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அகாரா பரிசத்தின் தலைவரான மஹந்த் கியான் தாஸ் என்பவர், தனது கால்களைக் கழுவுமாறு பெண்களைக் கேட்டுக் கொள்வதைவிட பெரிய பாவம் வேறொன்றும் இருக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கபட நாடகத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. எந்தப் புனித நூல்களைத் தாங்கள் மதிக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்கிறார்களோ அந்த நூல்களில் பெண்கள் கடவுள்களாக மதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் மோகன்பாகவத்தால் புரிந்து கொள்ள முடியாது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதையே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிறார்.
———————————————————————————————————————————————
ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே கருதி வருகிறது என்று சாதுக்களே குற்றம் சாட்டுகிறார்கள். அதனால்தான் பெண்களைத் தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ். சேர்த்துக் கொள்வதில்லை. ஆண்களோடு சரிநிகர் சமமாக அவர்கள் இருக்க முடியாது என்று கருதப்படுவதுதான் இதற்குக் காரணமாகும். ராஜ்கோபால் கோவிலின் பூசாரியான கவுசல் கிஷோர் சரண் கூறுகையில், மதம் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு ஏராளமான மோசடிகளை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த பாவம் நீண்ட நாட்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களை விடாது என்று குறிப்பிட்டார். பழங்குடியினத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட அந்தஸ்து தரப்படுகிறது என்பதால் அவர்களுக்கான முகாம்களில் பெண்களையும் அழைத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
———————————————————————————————————————————————

Leave A Reply

%d bloggers like this: