திருப்பூர், மார்ச் 5-கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தும் உரிய பதில் தராமல் வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததால் மனம் வெறுத்த கல்லூரி மாணவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் திடீரெனஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர்.காவலர்கள் அவரைப் பிடித்து அமர வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் குறைதீர் முகாமில் இருந்து நேரடியாக இந்த இளைஞரிடம் வந்து விசாரணை மேற்கொண்டார். வெள்ளகோவில் அருகே புள்ளசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற விசைத்தறிக் கூலித் தொழிலாளியின் மகன் கிருஷ்ணகுமார் (21) என்ற அந்த இளைஞர் ஆட்சியரிடம் கூறியதாவது: நான் ஸ்ரீ கலைவாணி கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்குச் சேர்ந்திருக்கிறேன்.
என் படிப்புக்கு செலவிடும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதி இல்லை. எனவே வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்க முடிவு செய்தேன். எங்கள் பகுதிக்கு கல்விக் கடன் வழங்குவதற்கான வங்கியாக வெள்ளகோவில் பாரத ஸ்டேட் வங்கிகிளை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் அந்த வங்கியில் சென்று கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக விசாரித்தேன். ஆனால் அந்த வங்கி அலுவலர்கள் உரிய பதில் கூறாமல் பத்து நாட்கள் கழித்து வரும்படி கூறினர். இதையேற்று பத்து நாட்களுக்குப் பிறகு போய்ப் பார்த்தபோது, மீண்டும் இதேபோல் ஒரு வாரம், பத்து நாள் கழித்து வரும்படி கூறி காலம் கடத்தினர்.இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு, ஐந்து மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர்.இதையடுத்து கடந்த மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அதன் பிறகு வங்கிக்குச் சென்றபோது தான் கல்விக் கடனுக்கான விண்ணப்பப் படிவத்தையே எனக்குக் கொடுத்தார்கள். அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து சென்று வங்கியில் கொடுத்தபோது, தனது குடும்பத்துக்கு வேறு எந்த வங்கிக் கடனும் இல்லை என பிற வங்கியில் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கும்படி கூறினர். இதைக் கேட்டு நானும் கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி என ஏறி இறங்கி கடனில்லை எனச் சான்று வாங்க முயன்றேன். ஒவ்வொரு வங்கியிலும் நூறு, இருநூறு என பணம் செலுத்தினால் தான் சான்றிதழ் தருவோம் எனக் கூறிவிட்டனர். வெள்ளகோவில் வட்டாரத்தில் மொத்தம் 17 வங்கிக் கிளைகள் இருக்கின்றனர். இத்தனை வங்கிகளிலும் கடன் இல்லாச் சான்று வாங்குவதென்றால் என்னாலோ, வறுமையில் தவிக்கும் என் குடும்பத்தாலோ முடியாது.
எனவே கல்விக் கடன் தராமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததால் இந்த முடிவுக்கு வந்தேன்.” என்று ஆட்சியரிடம் கிருஷ்ணக்குமார் கூறினார்.அப்போது மாவட்ட முதன்மை வங்கி மேலாளரும் அங்கிருந்தார். கல்விக் கடன் தருவதற்கு மாணவர்களிடம் வேறு எவ்வித சான்றிதழும் வங்கிகள் கேட்க வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தினார்.இதைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் இருந்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் வாங்கி உரிய விசாரணை மேற்கொண்டு கல்விக் கடன் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி முன்னோடி வங்கி மேலாளரிடம் உத்தரவிட்டார்.இதன்படி கிருஷ்ணகுமாருக்கு கல்விக் கடன் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மதியமே மாவட்ட ஆட்சியர் அந்த மாணவருக்கு கல்விக்கடன் தொகையை வழங்கினார்.கல்விக் கடனுக்காக இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: