ஈரோடு, மார்ச். 5-தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமையால் சாதிக்கொரு அங்கன்வாடி மையம் செயல்படும் அவலச் சூழல் நிலவி வருகிறது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்லம் தாலுகா, ராஜன் நகர் ஊராட்சிக்குட்பட்டது ராஜன் நகர் கிராமம். இக்கிராமத்தில் ஒக்கிலிய சமுதாய மக்கள் 400 குடும்பத்தினரும், அருந்ததிய சமுதாய மக்கள் 400 குடும்பத்தினரும், குறவர் சமுதாய மக்கள் 150 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கான அங்கன்வாடி மையத்தில் இம்மூன்று சமுதாய மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு சாதிவாரியாக 3 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் அங்கன்வாடி மையம் 1-ல் ஒக்கிலிய சமுதாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காவும், வனக்குழு சமுதாயக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மையம் 2-ல் குறவர் சமுதாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், அருந்ததிய மக்களுக்கான சமுதாயக் கூட நூலக கட்டித்தில் உள்ள மையம் 3-ல் அருந்ததிய சமுதாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.
குழந்தை பருவத்திலேயே சாதிய பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் ஏற்படுத்தும் விதமாக சாதிக்கொரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் அவல நிலையை மாற்றிடவும், இதற்கு காரணமாக உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து இத்தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சத்தியமங்கலம் ஒன்றியக் கமிட்டியின் சார்பில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.