ஈரோடு, பிப். 5-ஈரோட்டில் இன்று மின்விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுழற்சி முறைப்படி இரண்டு நாள் கட்டாய மின்விடுமுறையை தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில், ஈரோட்டில் திங்களன்று மின்விடுமுறை விடப்பட்டது.
ஈரோடு மின் மண்டலத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 828 உயர் மின் அழுத்த மின் இணைப்புகளும், 1 லட்சத்து 44 ஆயிரம் தாழ்வழுத்த மின் இணைப்புகளும் உள்ளன.தொடர்ந்து ஞாயிறு மற்றும் திங்கள் என இரண்டு நாட்கள் மின்விடுமுறையாக இருந்ததால். இத்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால், ரூ. 40 கோடி அளவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அனைத்தும் தொடர்ந்து இழப்பைச் சந்திந்து வருவதால் இத்தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிவநேசன் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தைச் சுற்றிலும் 160 ஸ்பின்னிங் மில்கள், 18 ஆயிரம் சிறு தொழில்கள், 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதேபோல், நகரப் பகுதியில் 10 ஆயிரம் வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு அறிவித்த மின்வெட்டு மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் ஈரோடு மண்டலத்திற்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் வருகிறது. இதனால், இத்தொழில் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மற்ற நாட்களில் உயர் மின் அழுத்த மின் இணைப்புகளை உபயோகிப்பவர்கள் 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத்தை உபயோகிக்கக் கூடாது. பதினைந்து நாட்களுக்குப் பின் காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரையிலும் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரத்தில் 88 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், ரூ.40 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை உருவாவதால், தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பை முழுமையாக இழக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, மறைமுக நூல்விலை, துணிகளின் விலை உயர்வு, இன்வெர்டர், ஜெனரேட்டர் பயன்படுத்தத் தடை போன்ற காரணங்களால் தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் மின்தடையை ஏற்படுத்தக் கூடாது.
மேலும் தொழிற்சாலைகள் மின்விடுமுறை நாட்களின்போது, தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற்று உபயோகிக்க மின்சார வாரியம் அனுமதிக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போல் சென்னையிலுள்ள தொழிற்சாலைகளுக்கும் மின்விடுமுறை நாளை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், 25 சதவிகித அளவிற்கு மின்தடையை போக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.தற்போது அமலில் உள்ள மின்தடையால், ஏற்கனவே கோவை, திருப்பூரில் உள்ள தொழில் நகரங்களில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: