கிருஷ்ணகிரி, மார்ச் 5 –
பெரும் பள்ளமாக கல் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் கடும் முயற்சிக்கு பிறகு நான்காவது நாளில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ளது வரகானப்பள்ளி.
இங்குள்ள கல் குவரிகளில் விதிமுறைகளை மீறி கல் வெட்டப்படுவதால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் தேங்கி யுள்ள மழை நீர் நூறு அடி ஆழத்திற்கும் அதிகமாக உள்ள தாக கூறப்படுகிறது. கடந்த புதனன்று (பிப்.29) புதுக் கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த முருகானந்தம் (21) தனது நண்பர்களுடன் இதிலுள்ள பள்ளம் ஒன்றில் குளித்த போது மூழ்கி விட்டார். திருச்சியிலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் ஓசூரிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 4 நாட்களாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் காவல் துறையினரும் முருகானந்தத்தின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பாறை இடுக்கில் சடலம் சிக்கியிருக்கலாம் என கருதி வெடி வைத்து அப்பகுதியை அதிரச்செய்தனர். அப்போது சட லம் தண்ணீரில் மிதந்தது. சடலத்தை மீட்ட உத்தனப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு சோதனைக்கு உட்படுத் தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.