சேலம், மார்ச், 5-சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இலவச வீட்டுமனை பட்டாகோரி மூன்னூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.சேலம் சூரமங்கலம் பெரியார் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.பின்னர் இவர்கள் கோரிக்கை மனு ஒன்றினை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்தனர். இதில் தெரிவித்திருப்பதாவது:சேலம் டவுன் பழைய சூரமங்கலத்தில் உள்ள பெரியார் தெருவில் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட ஏழைமக்கள் வாழ்ந்து வருகின்றோம். பலஆண்டுகாலமாக எங்களுக்குள் எவ்வித இன வேறுபாடின்றி வாடகை வீடுகளிலும். மரத்தடியிலும் வாழ்ந்து வருகின்றோம்.
அதேநேரம். இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் (சர்வே எண் 52/5) பயன்பாடின்றி தரிசு நிலமாக உள்ளது. இந்நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே. குடியிருக்க வீடு இல்லாமல் பெரும் துன்பத்திலிருந்து வரும் எங்களுக்கு அவ்விடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கி ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும். இம்மனுவினை தமிழக முதல்வர், வருவாய் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கேட்டறிந்த ஆட்சியர் வீட்டுமனை பட்டா குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முன்னூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென திரண்டுவந்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: