ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கொண்டாடவில்லை. மாறாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. இலங்கை அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்களின் ஆவேச ஆட்டம் வெற்றியைப் பறித்து விடுமோ? என்ற அச்சம் களமெங்கும் நிலவியது. ஆஸி. 15 ஓட்டங்களில் வென்றது.
இலங்கை 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி யது. அந்த வேளையில் உபுல் தரங்காவுடன் இணை சேர்ந்த நூவன்குலசேகர அபாரமாக ஆடினார். அவரும் தரங்காவும் சேர்ந்து 104 ஓட்டங்கள் எடுத்தனர். அதில் குலசேகரா மட்டும் 73 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 43 பந்துகளை எதிர் கொண்டு ஏழு நான்குகளும் மூன்று ஆறுகளும் எடுத்தார். இந்த இணையின் ஓட்டக்குவிப்பு ஆஸி.யைப் பின்னுக்குத் தள்ளியது.டேவிட் ஹஸ்ஸி அவரை வீழ்த்தியவுடன் கிளார்க் சற்று நிம்மதி கண்டார். தரங்கா 60 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை 306 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 321 ஓட்டங்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 163 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வாடே 64 ஓட்டங்களும் கிளார்க் 37 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸி. அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை எடுத்தது.இலங்கை அணியின் முன் மற்றும் நடு வரிசையை லீயும் டேவிட் ஹஸ்ஸியும் தகர்த்துவிட்டனர். இறுதி ஓவர்களில் வாட்சன் அபாரமாகப் பந்துவீசி 9.2 ஓவர்களில் 33 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

Leave A Reply