கோவை, மார்ச் 4- தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 23ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக செய்முறை தேர்வுகள் வருகிற 16 ம் தேதியில் இருந்து 26ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 75 ஆயிரம் மாணவர்கள் எஸ்எஸ்எல்.சி பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். இத்தேர்வு குறித்து, கோவை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 187 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு ஏழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வுகளும் அதே தேதிகளில் நடப்பதால் மதிய நேரத்தில் செய்முறை தேர்வுகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 மையங்களில் செய்முறைத் தேர்வுகள் நடக்க உள்ளது.
அறிவியல் செய்முறை தேர்வில் உயிரியியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு 4 செய்முறைகள் வீதம் மொத்தம் 16 செய்முறை கேள்விகள் உள்ளது. இக்கேள்விகளை குலுக்கல் முறையில் ஏதேனும் ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம். செய்முறை தேர்வு அந்ததந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பிலேயே விடப்படும். மதிப்பெண் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: