கோவை, மார்ச் 4-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் கண்ணாடிக் கடை நடத்தி வருபவர் வெங்கிடபிரசாத் (48). இவருக்கு சென்னை பெசன்ட் நகரில் ஒரு வீடு உள்ளது. இதனை அவர் கடந்த 2008-ம் ஆண்டு ஒருவருக்கு விற்றுள்ளார்.
ஆனால், இதனை மறைத்து, கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (65) என்பவரிடம் அதே வீட்டைக் காட்டி ரூ.1 கோடி 40 லட்சத்திற்கு மீண்டும் விலைபேசியுள்ளார். வீட்டின் உண்மை நிலையை அறியாத வெற்றிவேல், வீட்டிற்கு முன்பணமாக ரூ.85 லட்சத்தை கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை பத்திரப் பதிவின் போது தருவதாகவும் கூறியுள்ளார்.ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட வெங்கிடபிரசாத், வீட்டை வெற்றிவேல் பெயருக்கு மாற்றுவது தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வெற்றிவேல், விசாரித்ததில், வெங்கிடபிரசாத் அந்த வீட்டை ஏற்கனவே வேறொருவருக்கு விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.இந்த ஏமாற்றதால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், கோவை மாநகர காவல் ஆணையர் சுந்தரமூர்த்தியிடம் புகார் செய்தார். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாகியிருந்த வெங்கிடபிரசாத்தை கைது செய்தனர்.

Leave A Reply