“இடதுசாரிகளின் ஆட்சியில் மேற்குவங்க மாநிலமே பின்னோக்கிப் போய்விட்டது. அங்குள்ள மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வேலையின்மை வாட்டுகிறது” என்றெல்லாம் மாய்மாலம் காட்டி, மக்களின் வாக்குகளை அபகரித்து ஆட்சியைப் பிடித்துக்கொண்ட மம்தா பானர்ஜி அரசு இப்போது என்ன செய்கிறது தெரியுமா?மருத்துவமனைகளில் தொடர்ந்து குழந்தைகள் இறந்தவண்ணம் இருக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் தீப்பிடித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்ப்பலியானார்கள். கல்வி நிறுவனங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர்கள் நுழைந்து கல்வியாளர்களைத் தாக்குகிறார்கள். கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து சாவுக்கு வழிவகுக்கிறது.
இவையெல்லாம் அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள். இது தவிர இன்னும் என்னென்ன நடக்கிறது என்பதை அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் கே.கே.திவாகரன் ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை கீழே பார்ப்போம்.கொல்கத்தா டிராம்வே கார்ப்பரேசன் தொழிலாளருக்கும் 5 பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளருக்கும் நான்கு மாதமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் விக்ரம் சிங் என்ற தொழிலாளி வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
இதற்குக் காரணம், இந்த போக்குவரத்துக்கழகங்களுக்கு மேற்குவங்க அரசு அளித்துவந்த நிதி உதவி நிறுத்தப்பட்டதுதான். இடது முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது இந்தக் கழகங்கள் திறம்பட செயல்படவும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை அளிக்கவும் ஆண்டுதோறும் 400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி அளித்து வந்தது.இப்போது மம்தா அரசு நிதி உதவியை நிறுத்திவிட்டது. இதனால் நான்கு மாதமாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் 18 ஆயிரம் பேர் ஊதியமின்றி வாடுகிறார்கள். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பென்சன் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த மாதம் ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.இது மேற்குவங்கம் பற்றி கே.கே.திவாகரன் தரும் சித்திரம். இடது முன்னணி ஆட்சி நடந்து, மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான கேரள கூட்டணி அரசின் அவலம் பற்றியும் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசு, அரசுப் போக்குவரத்து நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதனால் 22 ஆயிரம் தொழிலாளர்கள் கூடுதலாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.
நலிவுறும் நிலையிலிருந்த போக்குவரத்துக் கழகம் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரம் புதிய பஸ்கள் ஆண்டுதோறும் வாங்கப்பட்டு சிறப்பான சேவை புரிந்தது. கேரள அரசு தான் வழங்கிய நிதித் தொகையான 1070 கோடி ரூபாய் கடனை ரத்து செய்தது.இதுதான் இடது முன்னணி ஆட்சிக்கும் முதலாளித்துவக் கட்சிகளின் ஆட்சிக்கும் இடையேயுள்ள முக்கிய வேறுபாடு.அந்த அநீதியை எதிர்த்து மேற்குவங்கத்தில் அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நான்கு மாத ஊதியத்தையும், பென்சனையும், இதர சலுகைகளையும் தொழிலாளருக்கு உடனடியாக வழங்க வேண்டுமென்றும், தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றும், இந்த அவலங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த போக்குவரத்து அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் மேற்குவங்க மாநில முதலமைச்சரைக் கேட்டிருக்கிறார்கள்.ஆனால் மம்தா அரசு இதையெல்லாம் நிறைவேற்றுமா என்பது சந்தேகம்தான். பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் தனியார் வசமாகும்போது எதிர்க்க மாட்டார்கள் அல்லவா! அந்த எண்ணத்துடன் அரசு இருக்குமோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.நன்றி : சிஐடியு செய்தி.

Leave A Reply