அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு,
வணக்கம்1963ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீக்கதிர் ஏடு உங்களின் பேராதரவுடன் இந்த ஆண்டு பொன்விழாவை நோக்கி பீடு நடைபோட்டு பயணம் செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் மனச்சாட்சியாக, உழைக்கும் மக்களின் போர்வாளாக மக்களின் எதிரிகளை கருத்து ரீதியாக சந்தித்து முறியடிக்கும் கேடயமாக தீக்கதிர் ஏடு கடந்த50 ஆண்டுகளாக செயலாற்றி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாவேந்தரின் பாட்டு வரிக்கேற்ப சுரண்டல் மிகுந்த முதலாளித்துவ உலகிற்கு மாற்றாக, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்ற பொதுவுடைமை லட்சி யத்திற்காகப் போராடும் ஏடு தீக்கதிர். உலக நாடுகளிடையே போரினைத் தூண்டி ஆயுத வியாபாரத்தையும், ஆக்கிரமிப்பையும் மூலதனமாகக் கொண்ட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறல்கள் அடாவடிகளை எதிர்த்து அஞ்சாமல் குரல் கொடுக்கும் ஏடு தீக்கதிர்.
‘பாரத நாடு பழம்பெரும் நாடு’ என்று பாடினார் மகாகவி பாரதி. ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக, மக்களின் சார்பாக நின்று போராடும் தேசபக்த ஏடு தீக்கதிர். தண்ணீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படும் இந்நாளில் நாட்டின் சுயசார்பை, சுயாதிபத்தியத்தை காக்க குரல் கொடுக்கும் ஏடு தீக்கதிர்.சில்லறை வர்த்தகத்தைக் கூட மொத்தமாக கொள்ளையடிக்க மத்திய ஆட்சியாளர்கள் வாசலைத் திறந்துவிட்டபோது அந்த முயற்சியை எதிர்த்து முறியடிப்பதில் முன்னின்ற ஏடு தீக்கதிர்.தொழிலாளர், ஊழியர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதையே சில ஏடுகள் தொழிலாகக் கொண்டுள்ள போது, ஆலைத் தொழிலாளி முதல் அரசு ஊழியர் வரை, முறைசாராத் தொழிலாளர் முதல் துப்புரவுப் பணியாளர் வரை அனைத்துப் பகுதித் தொழிலாளர்களின் போராட்டக் களமாக உரிமை முழக்கமாக ஒலிப்பது நமது ஏடு.
‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்.’ என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடினார் அன்று. அதுதானே நிலை இன்றும். உலகிற்கே உணவு தரும் உழவர் பெருமக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டு சாவது நாட்டிற்கே அவமானம் அல்லவா? விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக அயர்வின்றி பாடுபட்டு வருகிறது தீக்கதிர்.விஷம் என ஏறும் விலைவாசி, வாட்டும் வறுமை, விரட்டும் வேலையின்மை, கண்கட்டும் மின்வெட்டு போன்றவற்றின் கொடுமைகளை விளக்கி, தமிழகம் தொழில்வளர்ச்சி கண்டிட, நெசவுத் தொழிலின் நசிவு நீங்கிட, மக்கள் கருத்தை திரட்டிடும் ஏடு தீக்கதிர்.தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தெளிவான லட்சியத்தோடு செயல்படும் தீக்கதிர் சமூக நீதி சமர்க்களத்தில் முன்னணி போர்வீரனாகத் திகழ்கிறது.
பெண்களை ஆபாசமாகவும் மிக இழிவாகவும் சித்தரிக்கும் சில ஊடகங்களுக்கு மத்தியில் தேசத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களுக்கு சமநீதி கிடைத்திட போராடுகிறது தீக்கதிர் .சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காகவும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் தீக்கதிர் ஒட்டுமொத்தமாகச் சொல்லப் போனால் வியாபாரத்தையும், விளம்பரத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஊடகங்களுக்கு மத்தியில் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, நாட்டு நலன், மக்கள் நலன் ஆகியவற்றையே நாளும் முன்னிறுத்தும் ஏடாக விளங்குகிறது. தீக்கதிரின் வளர்ச்சி என்பது தேசத்தின் வளர்ச்சி, தமிழின், தமிழகத்தின் எழுச்சி, சமூகத்தின் மறுமலர்ச்சி. உங்கள் ஏடான தீக்கதிரின் வளர்ச்சிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) …………………………………………………………………………………… குழு

Leave a Reply

You must be logged in to post a comment.