திருப்பூர், மார்ச் 4-திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே வெள்ளியம்பாளையத்தில் காற்றாலை மின் நிலையத்திற்காக வேலி அமைத்ததால் தலித் விவசாயி சாகுபடி செய்த விளைநிலத்தில் பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு இழப்பீடு கேட்டதால் தலித் விவசாயியை சாதியைச் சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் கூறியிருப்பதாவது: கோட்டமங்கலம் அருகே வெள்ளியம்பாளையம் அருந்ததியர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரம் (வயது 62). இவர் வெள்ளியம்பாளையத்தில் உள்ள வரதராஜபெருமாள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்துக்கு அருகில் நடராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு தனியார் நிறுவனம் மூலம் காற்றாலை மின் உற்பத்தி செய்வதற்கு நடராஜ் அனுமதி கொடுத்திருக்கிறார். காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தார் அந்த இடத்தில் காற்றாலைக்கான மின் கம்பமும், சுற்றி வேலியும் அமைத்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த வேலை செய்தபோது கையாளப்பட்ட கனரக உபகரணங்களால், சுந்தரத்தின் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்திருந்த விவசாயப் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இதற்காக தனியார் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நடராஜுக்கு வழங்கியுள்ளது.தனது நிலத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்கு உரிய இழப்பீட்டுத் தொகைதரும்படி சுந்தரம், அருகாமை நில உரிமையாளரான நடராஜிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் இதற்கு உரிய இழப்பீடு தருவதற்கு பதிலாக நடராஜ், சுந்தரத்தை சாதியைச் சொல்லி திட்டியதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளார்.இது குறித்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் சுந்தரம் புகார் தெரிவித்தார். இதன் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: