திருப்பூர், மார்ச் 4-திருப்பூரில் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வருவோரை அச்சுறுத்தி மனஉளைச்சல் ஏற்படுத்தி, அவர்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கைக்கு திருப்பூர் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெய்வாபாய் பள்ளி சாலையில் சரஸ்வதி, பஞ்சேஸ்வரி என்பவர்கள் சில ஆண்டு காலமாக பழக்கடை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இவர்கள் சாலையோரமாக இந்தக் கடையை நடத்தி வரும் நிலையில், இந்த பகுதியில் கடையை அகற்ற வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் தகராறு செய்துள்ளார். ஐந்து முறை பழங்களை அள்ளிச் சென்றுள்ளார்.
மேலும் தினமும் தவறாமல் மாமூல் தர வேண்டும் அல்லது பழ வகைகள் தர வேண்டும் இல்லையென்றால் கடையைக் காலி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம், மாமன்ற உறுப்பினர் வலியுறுத்தி தொடர்ந்து தகராறு செய்துள்ளார். ஒரு மாத காலத்துக்கு முன்பு காவல் துறையினர் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர். சாதாரண சாலையோர வியாபாரிகளிடம் மாமன்ற உறுப்பினர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மாநகராட்சி மேயரும், காவல் துறையும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை கெடுக்கும் போக்கை சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இது போன்ற பிரச்சனைகள் தொடராமல் இருக்க மாநகராட்சி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு சங்கம் கேட்டுக் கொள்வதாக பி.பாலன் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: