கோலார், மார்ச். 4-
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியில் தொழிற் சங்க இயக்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டி வளர்த்த தோழர் சவுரிதாஸ் மார்ச் 4 அன்று காலமானார். அவருக்கு வயது 93. 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். 1942ல் பிஜிஎம்எல் (பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்) மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்ட இயக்கத்தாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்ட தோழர் சவுரிதாஸ், 2 ஆண்டுகள் மட்டுமே பணியில் நீடிக்க முடிந்தது. தொழிலாளர்களுக்கு பாடுபடும் இவரது செயலை கண்ட பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பணியில் இருந்து நீக்கிய தோடு சிறையிலும் தள்ளியது. பின்னர் சிறையில் இருந்து விடு தலையான அவர், கோலார் தங்கவயல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டார். ஆங்கிலேயே ஆட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் 1940 முதல் 1950 வரை பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
தங்கவயல் பகுதியில் பிரபல தொழிற்சங்க தலைவர்களாக விளங்கிய மறைந்த தலைவர்கள் தோழர் கே.எஸ்.வாசன், வி.எம்.கோவிந்தன் ஆகியோருடன் இணைந்து உழைக்கும் மக்களை திரட்டினார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தல கமிட்டி செயலாளராகவும் பணியாற்றினார்.மாநிலத்தில் இருந்து எல்லை கடத்தப்பட்ட சவுரிதாஸ், ஒரு ஹோமியோபதி டாக்டர் ஆவார். பின்னர் அவர் பூதாகூரில் மக்கள் மருத்துவமனை (பீப்பிள்ஸ் கிளினிக்) நடத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை அளித்தார். பின்னர் 1970ல் மீண்டும் கட்சியில் தீவிரமாக பணியாற்றத் துவங்கிய அவர், பிஜிஎம்எல் சிஐடியு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார்.1980ல் கோலார் தங்க வயல் பகுதி சிஐடியு தொழிற்சங்க தலைவராக செயல்பட்டார்.1980ல் சிஐடியு தொழிற்சங்கம் தேர்தலில் வெற்றிபெறக் காரணமாக இருந்தது இவரது அயராத பணி என்றால் மிகையல்ல. பிஜிஎம்எல் நிறுவனம் நட்டத்தில் உள்ளது என்று கூறி கோலார் தங்கவயல் பகுதியில் பணியை நிறுத்த மத்திய அரசு முயன்றபோது, அதற்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி தடுத்து நிறுத்தினார். அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து ‘கோலார் தங்கவயலை பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தை நடத்தினார்.இது மட்டுமல்லாமல் நகராட்சித் தொழிலாளர்கள், மருத்துவ மனை ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் , தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி தொழிற்சங்கங்களை உருவாக்கினார். கோலார் மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்களுக் காக தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக பணி புரிந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிவந்தார்.1976 மற்றும் 2006ல் இருமுறை கோலார் தங்கவயல் நகராட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். சர்வ கட்சித் தலைவர்களுடன் நட்புடன் பழகினார். 1990வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க பணியாற்றிய அவர், கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமாக பணி யாற்ற முடியாமல் இருந்தார். தோழர் சவுரிதாஸ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் பங்காருபேட்டை குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்தங்கவயல் கண்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிற்சங்கத் தலைவருமான தோழர் சவுரிதாஸ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிறந்தாலும் கர்நாடகாவில் குறிப்பாக கோலார் தங்க வயல் பகுதியில் தொழிற்சங்கத்தை கட்டுவதிலும் கம்யூனிசக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று அக்கட்சிக்கு ஆதரவைத் திரட்டுவதிலும் கடைசி வரை பாடுபட்ட தோழர் சவுரிதாஸ் மறைவு, தொழிற்சங்க இயக்கத்திற்கு மட்டுமல்ல கம்யூனிச இயக்கத்திற்கும் பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார். தோழர் சவுரிதாஸ் மறைவுக்கு கர்நாடக மாநில சிஐடியு, சிபிஎம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரி விக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.