குன்னூர்.மார்ச்.4-
குன்னூரில் தலித் மக்களின் நடைபாதையை அடைத்து தனியார்எஸ்டேட் நிர்வாகம் அடாவடி செய்து வருகிறது. இம்மக்களுக்கு நடைபாதையை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் (29-வது வார்டு) 2 ஆயிரம் தலித் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் காந்திபுரம் மக்கள் குன்னூர் பேருந்து நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்குச் செல்ல தனியார் எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த நடைபாதையை அடைக்க தனியார் எஸ்டேட் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இந்த பாதையை மூடக் கூடாது என்று இதைப் பயன்படுத்தி வந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை எஸ்டேட் நிர்வாகம் திடீரென்று பாதையை இரும்பு கேட் போட்டு மூடிவிட்டது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பு வலுத்ததால் கேட் அகற்றப்பட்டது.
ஆனால் மீண்டும் சனிக்கிழமை இரும்பு கேட் அமைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டது.இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்ற கூலித் தொழிலாளி நோய்வாய்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொணடு செல்ல தலித் மக்கள் சுமந்து வந்தார்கள். ஆனால் கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் அவரை கேட்டுக்கு மேலாக தூக்கி எடுத்து சென்றார்கள்.காந்திபுரம் பகுதி தலித் மக்களுக்குரிய நடைபாதை அடைக்கப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா கமிட்டி செயலாளர் ஆர்.பொன்னு, கமிட்டி உறுப்பினர்கள் சாலமன் ராஜா, லோகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் எம்.சண்முகம் ஆகியோர் அங்கு வந்து மூடப்பட்ட இரும்பு கேட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்தனர்.
இந்த பிரச்சனையில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் தன்னிச்சையாக அவ்வப்போது தலித் மக்களின் பாதையை அடைத்து இரும்பு கேட்டால் மூடுவதைக் கண்டித்தும், பல ஆண்டு காலமாக தலித் மக்கள் பயன்படுத்தி வரும் பாதையை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: