கோவை, மார்ச் 4-
ஏழை மக்களின் நில உரிமையை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன்நிற்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேசினார்.தமிழக நில உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கோவை தாமஸ் கிளப் சிவக்குமார் அரங்கில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் எம்.பி. சிறப்புரை ஆற்றியதாவது:-
உத்தரப்பிரதேசம் தொடங்கி நொய்டா வரை செல்லும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலைக்காக பொதுமக்களிடம் அம்மாநில அரசு நிலம் கையகப்படுத்தியுள்ளது. தேவைக்கும் அதிகமான நிலத்தை மிகக்குறைவான விலையில் மக்களிடம் பெற்று மிக அதிக விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசே விற்றது.இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தினார்கள். இதில் கொடுரமாக நடந்த துப்பாக்கி சூட்டில் 14 விவசாயிகள் பலியானார்கள்.பின்னர் உச்சநீதி மன்றம் அந்த நில கையப்படுத்தலையே ரத்து செய்துவிட்டது. இதன் பின்னர் நாடு முழுவதும் நிலம் கையகப்படுத்துவதற்கான விதிகள், புதிய சட்டம் குறித்த விவாதம் நடந்து வருகிறது.மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளுக்கு பொதுமக்களின் ஒப்புதலை பெற்று போதுமான இழப்பீடு அளித்து நிலம் கையகப்படுத்தும் செயலை அரசு செய்ய வேண்டும்.ஆனால் எக்காரணம் கொண்டும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதையும்,கார்ப்பரேட் நிறுவனங்களின் நில அபகரிப்பையும் உறுதியாக நின்று எதிர்ப்போம்.வனப்பகுதியில் இருந்து பழங்குடி மக்களை பாதுகாத்திட போராடியதுடன் மார்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியிலிருந்த ஐமுகூ-1 அரசு மூலம் வன உரிமை பாதுகாப்புச் சட்டம் 2005 நிறைவேற்ற பாடுபட்டோம்.
தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் சாதாரண, ஏழை எளிய மக்களின் நில உரிமையை பாதுகாக்க முன் நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் பஞ்சமி நிலங்களும்,நகர்புற குடிசை மக்களின் நில உரிமைகளும் என்ற தலைப்பில் கோவை இரவிக்குமார்,தமிழகத்தில் நில உரிமை போராட்டங்கள் என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழ் துணை ஆசிரியர் கணேஷ், நிலமும் சட்டங்களும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் முருகவேல்,நிலமும் அரசும் என்ற தலைப்பில் வெ.சுப்பிரமணியன் மற்றும் ரங்கசாமி, குமரவேல் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கம்,தேசிய நெடுஞ்சாலை,சுற்றுச்சாலைத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்கள்,உக்கடம்,காந்திபுரம்,வி.எச். சாலை குடிசைப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: