கோவை. மார்ச் 4-பருத்தியின் விலை 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2012 செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஆதார விலைக்கும் அதிகமாக இருப்பதால், விலையை நிர்ணயிப்பதில் இந்திய பருத்திக் கழகத்தின் தலையீடு தேவைப்படாது என இந்திய பருத்திக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பி.கே.மிஷ்ரா தெரிவித்துள்ளார்.சைமா சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று துவங்கப்பட்ட ‘டெக்ஸ்பேர் 2012’ எனும் விழாவில் கலந்து கொண்டஅவர் மேலும் தெரிவிக்கையில்:இதுவரை இக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வணிக ரீதியானாதாகவும், அதேசமயம் குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஆதரா விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை தேவைப்படாத நிலையில் உள்ளது. தற்போது பருத்தியின் விலை ஆதார விலையை விட அதிகமாக குவிண்டாலுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை கிடைக்கிறது. இருப்பினும், ஆலைகள் மேற்கொள்ளும் கொள்முதல் அளவோ குறைவாகவே இருக்கிறது. இதனை சீர் செய்யும் நடவடிக்கைகளை தென்னிந்திய ஆலைகள் சங்கத்துடன் (சைமா) இணைந்து கோவை மாநகராட்சி மேற்கொள்ளவேண்டும் என்றார்.
பின்னர் இக்கண்காட்சியை துவங்கி வைத்து கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி தெரிவித்ததாவது, இந்தியா முழுவதுமுள்ள நூற்பாலைகளில் 47 சதவிகித நூற்பாலைகள் தமிழகத்தில் உள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும், இங்குள்ள நூற்பாலைகள், வங்காளதேசம், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையான தரத்தில் உற்பத்தி செய்து வருகின்றன. அதேபோல், நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்திலிருந்து பெறப்படும் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.இதுகுறித்து, இந்திய ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திவென் ஜி.டெம்பலா தெரிவிக்கையில், ஜவுளிக்குழு சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி, கடந்த 2010-11ம் ஆண்டிற்கான ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் மொத்த உற்பத்தி எதிர்பார்த்த அளவைவிட 31 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,150 கோடியாக உள்ளது. இது கடந்த 2009-2010ம் ஆண்டில் ரூ.4,245 கோடியாக இருந்தது. அதேபோல், இப்பொருட்களின் இறக்குமதி ரூ.6,500 கோடியிலிருந்து ரூ.5,806 கோடியாக குறைந்துள்ளது. மற்றொரு புறத்தில் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.582 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.650 கோடியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இக்கண்காட்சியில் பல்வேறு ஜவுளி சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: