வளரும் பொருளாதாரம், அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடு, மகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்றெல்லாம் இந்தியாவைப் பற்றி ஆட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள். யுனிசெப்(ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் கல்வி நிதியம்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை நாட்டில் நிலவும் மோசமான நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. திருமணமாகியுள்ள பெண்களில் 47 சதவிகிதத்தினர் 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆகி விட்டனர். 15 சதவிகிதப் பெண்களுக்கு 15 வயது நிறைவு பெறுவதற்கு முன்பே திருமணம் ஆகி விட்டது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் இந்த ஆய்வறிக்கையில் வெளியாகியிருக்கிறது.
நவீன இந்தியாவில் குழந்தைத் திருமணம், சிறு வயதிலேயே குழந்தை பிறப்பு மற்றும் வீட்டில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் போன்ற சமூக நெருக்கடிகள் தொடர்கின்றன என்று யுனிசெப் ஆய்வு கூறுகிறது.“உலகக்குழந்தைகளின் நிலை : 2012” என்று பெயரிட்ட ஆய்வறிக்கையை யுனிசெப் வெளியிட்டுள்ளது. மேற்கூறிய சமூக அவலங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பெரிய இடைவெளி இருப்பதையே அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொடுக்கப்படும் நிலையைப் பொறுத்தவரை, சதவிகித அடிப்படையில் ஐந்து நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியிருக்கின்றன.
வங்கதேசம், பர்கினோ ஃபாசோ, கினியா, மாலி மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில்தான் 18 வயது நிறைவு பெறுவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுக்கும் அவலம் இந்தியாவை விட அதிக சதவிகிதத்தில் இருக்கிறது. தற்போதுள்ள மக்கள் தொகையில் 15 மற்றும் 19 வயதுக்கிடையில் உள்ள இந்தியப் பெண்களில் 37 சதவிகிதத்தினர் திருமணமாகிவிட்டனர். இதைப் பொறுத்தவரை வங்கதேசம்(46 சதவிகிதம்) மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு(59) ஆகிய நாடுகளில் மட்டுமே இந்தியாவை விட அதிகமான பிரச்சனைகள் உள்ளன. தற்போது 20 முதல் 24 வயது வரையிலுள்ள பெண்களில் மட்டும் 22 சதவிகித இந்தியப் பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணமானவர்களாவர்.
ஒவ்வொரு ஆயிரம் குழந்தைப்பிறப்பிலும் கிட்டத்தட்ட 45 குழந்தைகள் 19 வயது நிறைவு பெறாத பெண்களுக்கே பிறக்கின்றன. சமூக ரீதியிலான பழைய மற்றும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடாத நிலையிலேயே இந்தக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. இருபுறங்களிலும் மோசமான சூழல்குழந்தை பிறந்து ஐந்து வயது நிறைவு பெறுவதற்கு முன்பே உயிரிழப்பதில் உலகிலேயே மோசமான 50 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடித்திருக்கிறது. பிறக்கும்போதே மூன்றில் ஒரு குழந்தை மிகவும் எடை குறைவான நிலையில் பிறக்கிறது.
50 சதவிகிதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கே தாய்ப்பால் கிடைக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நகர்ப்புறத்தில் 33 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 46 சதவிகிதமும் எடை குறைவான நிலையிலேயே உள்ளன. அயோடின் கலந்த உப்பை பாதிக்கும் குறைவான இந்தியக் குடும்பங்கள்தான் உட்கொள்கின்றன என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆய்வு குறித்துக் கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான யுனிசெப் பிரதிநிதி கரின் ஹல்சோப், நகர்ப்புறத்தில் மோசமான சூழலில் வாழும் ஏழைக்குடும்பங்களும், கிராமப்புறத்தில் வாழும் ஏழைக்குடும்பங்களைப் போன்றே சுகாதாரம், சத்துணவு, குடிநீர், கல்வி போன்றவற்றைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள் என்கிறார்.ஆய்வு குறித்து மேலும் பேசிய அவர், நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் பிறந்த குழந்தை தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடாமலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கிராமப்புறங்களிலும் இதே நிலைமைதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நகர்ப்புறத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பளபளப்பால் இந்த அவலம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. நகர்ப்புறத்தில் பெரிய இடைவெளி உள்ளது. ஒரு புறம் பெரிய வாய்ப்புகள், மறுபுறத்தில் பெரிய அளவு இழப்புகள் என்று அருகாமையிலேயே பணக்கார மற்றும் ஏழைக்குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் தற்போது 20 முதல் 24 வயது வரையிலான பெண்களில் 6 கோடிப்பேர் 18 வயது நிறைவு பெறுவதற்கு முன்பேதிருமணம் ஆனவர்கள் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: