ஈரோடு, மார்ச் 3-பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வேளாண் விற்பனை முனைய வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் வேளாண் விற்பனை முனைய வளாகம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 48 ஏக்கர் பரப்பளவில் ரூ. 120.62 கோடி மதிப்பீட்டில் இவ்வேளாண் விற்பனை முனைய வளாகம் அமையவுள்ளது.
இவ்வளாகம் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளான தரம் பிரித்தல், குளிர்பதன கிடங்குகள், பழங்கள் பழுக்க வைக்கும் அறைகள், மின்னணு ஏல மையம், தரக்கட்டுப்பாடு ஆய்வக வசதி, நவீன உபகரண வசதி, பதப்படுத்தும் அறை, வங்கி, தகவல் தொடர்பு மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய விற்பனை முனைய வளாகமாக அமையவுள்ளது. மேலும் விவசாயிகள் எளிதாக தங்கள் பொருட்களை விற்பனை செய்திடும் வகையில் 7 மாவட்டங்களிலும் 20 இடங்களில் நவீன சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்விற்பனை முனையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 மெட்ரிக் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யலாம்.
இவ்விற்பனை முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை காலை பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையில் இருந்து இவ்விற்பனை முனைய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர், வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: