கோவை,மார்ச்.3-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2011-12-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி,பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம் இருந்து எஸ்.டி.ஏ.டீ. உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:உதவித்தொகை பெற கடந்த 1-7-2010 முதல் 30-6-2011 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட தேசிய சம்மேளனம் நடத்திய தேசிய அளவிலான போட்டிகளிலும்,அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.13ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர்,நேரு விளையாட்டரங்கம், கோவை-18 முகவரியில் பெற்று பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16-3-2012 தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: