ப.பாளையம், மார்ச் 3-பள்ளிபாளையம் அருகில் விசைத்தறி தொழிலாளியை நிர்வாணப்படுத்தி கொலை வெறித் தாக்குதல் நடத்திய உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.பள்ளிபாளையத்தை அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான 70 விசைத்தறிகளை இயங்கி வருகின்றன. இவரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அசோக்குமார் என்ற தொழிலாளி குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதற்குமுன், அப்பகுதியிலுள்ள வைஸ் சின்னுசாமி என்பவரின் விசைத்தறியில் அசோக்குமார் வேலை செய்து வந்துள்ளார். அப்போது. அவரிடமிருந்து பெற்ற கடன் தொகையான ரூ.35ஆயிரத்தை மனோகரனிடம் பெற்று அடைத்துள்ளார். இதன்பின் கடனுக்காக வெற்று பத்திரம் மற்றும் வெள்ளை பத்திரத்தில் முன்னர் கையெழுத்துப் பெற்றதை திருப்பி கொடுக்குமாறு அசோக்குமார் கேட்டுள்ளார். ஆனால், இப்பத்திரத்தை வைஸ் சின்னுசாமி, மற்றொரு விசைத்தறி உரிமையாளரான மனோகரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளியான ஆசோக்குமாரிடம் தெரிவிக்காததால் அவர் தொடர்ந்து வெற்று பத்திரம் குறித்து கேட்டு வந்துள்ளார். ஆனால். அசோக்குமார் விசைத்தறி உரிமையாளர் வைஸ் சின்னுசாமி வெற்று பத்திரம், வெள்ளை பேப்பரை கொடுக்காமல் நாள் கடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக்குமாருக்கு மனோகரன் மேலும் ரூ.30 ஆயிரம் பாக்கி என்ற பெயரில் கடனாகக் கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த மாதம் 23ம் தேதி வீட்டிற்கு வந்து கையெழுத்திட்ட பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு வைஸ் சின்னுசாமி கூறியுள்ளார். இதனை நம்பி அசோக்குமார் தனது நண்பர்கள் கண்ணன் மற்றும் வேலு ஆகியோருடன் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்நேரம் அங்கிருந்த மனோகரன் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சாரமாரியாக மூவரையும் தாக்கியுள்ளார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அவர்கள் அடி தாங்க முடியாமல் அலறினர். இதன்பின் உடன் வந்த வேலு என்பவர் தப்பி ஓடி விட்டார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அசோக்குமார் ஒருவழியாக தப்பி வந்துள்ளார். ஆனால், கால் சற்று ஊனமுற்றிருந்ததால் கண்ணன் என்பவர் தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், அவர் மயக்கமடையும் வரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனிடையே, அவர்களிடமிருந்து தப்பிய அசோக்குமார் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கு வந்த விசைத்தறி உரிமையாளர் மனோகரின் மனைவி சமாதானமாக பேசிக் கொள்ளலாம் என கூறி அசோக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோரை வஞ்சகமாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால். வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் அவரை விறகு கட்டையால் தாக்கி உள்ளனர். இதைப்பார்த்து அசோக்குமாரின் மனைவி மற்றும் கைக்குழந்தைகள் கதறி உள்ளனர். ஆனால் மனமிறங்காத மனோகரன் தொழிலாளியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.இதன்பின், உயிர்பிழைத்தால் போதுமென்ற நிலையில் மீண்டும் அவ்விடத்திலிருந்து அசோக்குமார் தப்பி வெப்படையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த மனோகரன் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வெப்படைக்கு சென்றுள்ளனர். அங்கு,அவரின் தாய் மற்றும் தந்தையை கடுமையான சொற்களால் விசைத்தறி உரிமையாளர்கள் திட்டி உள்ளனர். மேலும். அசோக்குமாரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அவரை ஒரு அறையில் அடைத்து ஆடைகளைக் களையச் செய்துள்ளனர். இதன்பின். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அடைத்து வைத்து சித்ரவதை செய்தும், கைவார் எனப்படும் பெல்ட்டால் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதன்பின், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும், அடுத்த நாள் இரவு சிப்ட் வேலைக்கு வரவேண்டும் என எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். ஆனால் கடுமையாக தாக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களால், தான் தாக்கப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், இப்புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்தும், விசைத்தறி உரிமையாளருக்கு ஆதரவாக பேசியும் வழக்கு பதிவு செய்யாமால் திருப்பி அனுப்பி உள்ளனர்.இதனிடையே, சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தான் தாக்கப்பட்டது குறித்து அசோக்குமார் தெரிவித்த பிறகே, இச்சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாக்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.