லக்குறிப்பேடு என்ற இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் புரட்சியாளர் லெனினுடன் வாழ்ந்த உணர்வைப்பெறமுடியும். வாசிக்கும்வரை மட்டு மல்ல வாசித்து முடித்த பிறகும் அந்த உணர்வுகளும், நினைவுகளும் நம்மை விட்டு அகன்றிட மறுக்கும். அத்தகைய சக்தியான படைப்பாக இந்த நீலக்குறிப்பேடு என்ற புத்தகம் திகழ்கிறது. இது குறுநாவலா? பயணக் கதையா? குடும்பச் சித்திரமா? புரட்சிக்குழுக்களின் செயல்பாடுகளா? என்று பிரித்துச்சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து தன்மைகளையும் உள்ளடக்கிய படைப்பாக இந்த நூல் உள்ளது.ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக பல விபரங்களை தெரிந்துகொள்ள முடியும். சில புத்தகங்கள் உணர்வுகளை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் இந்த நீலக்குறிப்பேடு இந்த இரண்டுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்து விட்டது. ருஷ்யாவை 1917-ம் ஆண்டு புரட்சிகர சூழல் என்னும் சூறைக்காற்று சுற்றி வளைத்திருந்தது. கொடுங் கோல் ஆட்சி நடத்திய சார் மன்னன் தூக்கியெறியப்பட்டான்.
முதலாளித்துவ வர்க்கப் பிரதி நிதியான கெரன்ஸ்கி தலைமையில் ஆட்சிநடைபெற்ற காலம். கெரன்ஸ்கி அரசு தொழி லாளர்களையும், போல்ஷ்விக்குகளையும் கடுமையாக அடக்கியது. லெனினை ஜெர் மன் நாட்டு உளவாளி என்றும், மொடாக்குடியன் என்றும், பெண் பித்தன் என்றும் அவதூறு களை அள்ளிவீசிய காலம். லெனினை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்து மோப்பநாய்களையும் வேட்டைநாய்களையும் கொண்டு காடுகழனி யெல்லாம் தேடியது. இத்தகைய சூழ்நிலையில்தான் லெனின் பெட்ரோகிராட் நக ரத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கைக்கு செல்கின்றார்.
அக் கிராமத்தில் எமல்யனோவ் என்பவரின் நிலத்தில் புல் அறுக்கும் பின்லாந்து நாட்டு வேலைக்காரனாக வேடமிட்டு நடத்தும் தலைறைவு வாழ்வை விளக்குவதுதான் இப் புத்தகத்தின் நிகழ்வுகளாகும். லெனின் வாழ்வில் இது சிறுபகுதியாக இருந்தாலும், கொந்தளிப்பு நிறைந்த காலம் என்பதால் வாசகனின் உள்ளத்தில் பெருவெள்ளத் தையும், உணர்ச்சி பிரளயத்தையும் ஏற்படுத்துகின்றது. லெனின் அக்கிராமத்திற்கு ரக சியமாக பயணம் செய்வதே திகிலூட்டுவதாக உள்ளது. லெனினும், ஜுனோவிவ் இருவரும் படகில் கடந்து செல்லும் அந்த பரந்த ஏரியின் நிசப்தமும், அதன் பூவிரியும் கரைகளும், கால்கள் புதையும் சகதியும், மிதமான தென்ற லும், அசைவற்ற நீரின் நிசப்தமும், ஒளியை விழுங்கும் இருளும், இரவை போர்த்திக் கொள்ளும் அமைதியும் வாசகனின் லேசான இதயத்தை கலைத்து படபடப்பை கூட்டுகிறது. எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும்? எப்படி மாறுவேடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பல செய்முறை விளக்கங்களை லெனின் மூலமாக இப்புத்தகம் வழங்குகிறது. ஆயுதங்களை எப்போது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? அரசியல்வாதிக்கும் இராணுவ வீரனுக்கும் என்ன வேறுபாடுகள்? தவறான பாதை களின் விளைவுகள் என்ன? போன்ற பல தந்திரோபாயங்களை விளக்கிட பல பக்கங் கள் தேவைப்படும்.
ஆனால் இப்புத்தகத்தில் நிகழ்வுகளின் காலத்தையும், களத்தையும் வாசகனின் கண்முன் காட்சிப்படுத்தி நிறுத்துவதால் சில வரிகளே மேற்கண்ட பெரும் கேள்விகளுக்கு விடைஅளித்து விடுகின்றது. தலைமறைவு வாழ்க்கையும் துண் டிக்கப்பட்ட இடமும் புரட்சிகரமான பணிகளை செய்வதற்கு தடையாக இருக்க முடியாது என்பதற்கு இப்புத்தகம் லெனின் மூலமாக பல தடயங்களை விட்டுச் சென்றுள்ளது.லெனின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடித்தான் துண்டுபிரசுரங்கள் எழுது வதை வழக்கமாக கொண்டிருந்தார். வேட்டைக்காரனுக்கு பயந்து பதுங்கி இருக்கும் மிருகங்கள் போல் தலைமறைவு வாழ்க்கையில் இது சாத்தியமா? லெனின் எப்படி சாத்தியப்படுத்தினார் என்பது இப்புத்தகத்தில் விளக்கப்படுகிறது. போல்ஷ்விக்குகள் ஆட்சியை பிடித்தால் தொடர்ந்து நடத்தமுடியுமா? வேண்டு கோளுக்கு பதிலாக உத்தரவிடவேண்டும். போராட்டத்திற்கு பதிலாக முடிவெடுத்து அமலாக்கிட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றது.
இந்தக்காலத்தில் லெனின் நேர்த்தியாக குறிப்பெடுத்து எழுதிமுடிக்காமல் வைத்திருந்த அந்த நீலநிற குறிப் பேட்டை அவசரமாக தேடுகின்றார். அதை எழுதிமுடிக்க வேண்டிய தருணம் என்று நினைக்கின்றார். அரசைப்பற்றிய கருத்துக்களையும், புரட்சியை பற்றிய பார்வையையும், வரலாற்று ரீதியான அணுகுமுறைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தத்துவத்தை மேலும் வளப்படுத்துவதற்கான குறிப்புகளையும் முன்வைத்து புத்தகமாக எழுத ஆரம்பிக்கின்றார். நீலக்குறிப்பேட்டை அவர் தொடர்ந்து தேடுவதும், அதையே இந்த நூலுக்கு தலைப்பாக மாற்றி இருப்பதும் அந்த குறிப்பேட்டின் முக்கியத்து வத்தையும் அதில் பொதிந்துள்ள தத்துவார்த்த அரசியலையும் நமக்கு விளக்குகின்றது. நீலக்குறிப்பேடு என்ற இந்தப்புத்தகம் புரட்சிகரமான அரசியல் நடவடிக்கை களை மையப்படுத்தி இருந்தாலும் எந்தக்கருத்தும் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர முடிய வில்லை.
கதாபாத்திரங்களின் வாழ்வினூடாக எழுத்துக்கள் செல்கிறதே தவிர, எழுத்துக்களி னூடாக கதாபாத்திரங்கள் செல்வது பின்னுக்குச் சென்றுள்ளது. வாசிப்பு என்ற இன்பத்தி னூடே எண்ணற்ற உணர்வுகளை உருவாக்கி உலாவரச் செய்கின்றது இந்த நீலக் குறிப்பேடு.

Leave a Reply

You must be logged in to post a comment.