யோகாசனங்களை சொல்லிக் கொடுத்து, அதை பெரிய அளவில் வர்த்தகமாக மாற்றிய பாபா ராம்தேவ், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களை விற்கும் கடைகளை ஏராளமான அளவில் திறக்கவுள்ளார்.பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், தனது நோக்கம் வியாபாரம் அல்ல என்று கூறியிருக்கிறார். பலரும் சேவையாகவே யோகாசனப் பயிற்சியை அளித்து வந்த நிலையில், அதை கோடிக்கணக்கான ரூபாய் கொட்டும் வியாபாரமாக மாற்றியவர் ராம்தேவ். நாடு முழுவதும் 600 விநியோகஸ்தர்களை நியமித்திருக்கிறார்.
இப்படி வியாபாரத்தைத் துவங்கியவுடன், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போர் என்று அறிவித்துள்ளார். அந்நிய முதலீடு, சில்லரை வர்த்தகத்தைச் சூறையாடும் முயற்சி போன்றவற்றிற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை தொழிற்சங்கங்களும், பொது மக்களும் நடத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் வாயைத் திறக்காத ராம்தேவ், சொந்தக் கடைகளைத் திறக்கும் வேளையில், தேச இறையாண்மை, சுதேசி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.முதல் கட்டமாக, தில்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் போன்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மார்ச் 10 ஆம் தேதிக்குள் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வெளிச்சந்தையில் இவரது நிறுவனப் பொருட்கள் கிடைக்கும். அதோடு கிராமங்களில் சுதேசி மையங்கள் திறக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருக்கிறார். இதுபோன்று ஏற்கெனவே அளிக்கப்பட்ட பல உறுதிமொழிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.தனது வியாபார உத்திக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை துணைக்கு இழுத்துள்ளார். மேலும், இந்த வியாபாரத்தில் வரும் லாபம் கிராமப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்திற்காகச் செலவிடப்படும் என்கிறார். 200 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டுத்தீவு ஒன்றை வாங்கிப் போட்டுவிட்டு, தனது யோகா மாணவர் கொடுத்தார் என்றெல்லாம் கதைவிட்டவர், வியாபாரம் செழிக்க தேசம் பற்றிப் பேசி வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: