1948ம் ஆண்டு பிரிட்டனின் தலைநகர் பக்கிங்ஹாம் அரண்மனை. 1948 லண்டன் ஒலிம்பிக் கால்பந்து அணிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சகோதரி மறைந்த இளவரசி மார்க்கரெட் இந்திய அணித்தலைவரைத் தேடிவந்தார்.மிக மென்மையாகப் பேசும் அவரிடம் முரட்டுத்தனமாக ஆடும் ஐரோப்பிய ஆட்டக்காரர்களை எவ்வாறு காலில் காலணி அணியாமல் எளிதாகச் சமாளிக்கிறீர்கள் என்று இளவரசி வினவினார்.
வலிமை மனதில் உள்ளது என்று பதில் அளித்தார் இந்திய கால்பந்து அணியின் தலைவர் சைலேந்திர நாத் மன்னா.சுதந்திரம் பெற்ற முதல் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி ஆடியது. அன்றைய காலகட்டத்தில் இந்திய அணியின் புத்துணர்ச்சிக்கும் புத்தெழுச்சிக்கும் அடித்தளமிட்ட சைலேந்திர நாத் மன்னா இயற்கையை வெல்ல முடியாமல் திங்களன்று (27.2.2012) அதிகாலையில் காலமானார்.
1.9.1924 அன்ற பிறந்த அவர் தனது 87ம் வயதில் மரணமடைந்தார்.அவருக்குப் பின்வந்த கால் பந்தாட்டக்காரர்கள் அனைவரும் அவரிடம் மரியாதையுடனும் பயபக்தியுடனும் நடந்துகொண்டனர். இந்திய கால்பந்தின் அடையாளமாகக் கருதப்படும் பி.கே.பானர்ஜி, தனது தலைவனின் மறைவு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்.
இயல்பான தலைவர்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடையாளமின்றி இருந்த இந்திய கால்பந்துக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் சைலேந்திரநாத் மன்னா. அடையாளத்தை உருவாக்க முயன்ற மன்னா 1948ல் அடையாளமாகவே மாறிவிட்டார். லண்டன் ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே இந்தியா, பிரான்சிடம் 1-2 எனத்தோற்றது. இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆடியது. ஆயினும் சர்வதேச அனுபவக்குறைவும், ஒலிம்பிக் தருணத்தின் மலைப்பும் இந்திய தோல்விக்குக் காரணமாகும்.
தோல்வியைப் பற்றி பேசுவதற்கு மன்னா எப்போதும் தயாராக இருந்தார். அவருடைய விவரிப்பைக்கேட்டவருக்கு இந்தியா தோற்றதா? வென்றதா? என்ற ஐயம் எழுவது இயல்பே. பிரான்ஸ் – இந்தியா ஆட்டத்தை நேரில் பார்த்த இளவரசி மார்க்கரெட்டின் கேள்வி அதன்பின் எழுந்தது.1951ம் ஆண்டில் புதுதில்லியில் நடந்த முதலாவது ஆசியப்போட்டிகளில் இந்திய கால்பந்து அணி தங்கம்வென்றது. அவருடைய தலைமை சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்றது. இங்கிலாந்து கால்பந்து அமைப்பு 1953ம் ஆண்டில் வெளியிட்ட ஆண்டுக்குறிப்புகளில் தேர்வு செய்த பத்து தலை சிறந்த கால்பந்து அணித் தலைவர்களில் மன்னாவும் ஒருவர்.
அவர் மட்டுமே வெள்ளையர் அல்லாதவர்.1952-55 வரை நான்கு நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பர்மா) பங்கேற்ற நான்குமுனைப் போட்டிகளை வென்ற இந்திய அணிக்கு மன்னா தலைமை வகித்தார். இந்த வெற்றிகள் மூலம் அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.ஜியாலாஜிகல் சொசைட்டி ஆப் இந்தியா என்ற இந்திய அரசு நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார்.
தனது 18ம் வயதில் 1942ம் ஆண்டில் ஹெளரா யூனியன் என்ற இரண்டாம் பிரிவு அணியில் இருந்து விலகி மோகன் பேகனில் மன்னா இணைந்தார். 1960ம் ஆண்டில் கால்பந்திலிருந்து ஓய்வுபெறும்வரை அவர் அதைவிட்டு விலகவில்லை. தன்னுடைய விளையாட்டுக்காக அவர் மோகன் பேகனிடம் பணம் வாங்கவில்லை. தன்னுடைய அரசுச்சம்பளம் தனக்கு போதுமானது என்று அவர் கூறினார்.ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர் மோகன் பேகனின் நிர்வாகப் பணியில் ஈடுபட்டார்.
அதன் உதவிச்செயலாளராகப் பணியாற்றிய அவர் கால்பந்துடன் அவருக்கிருந்த தொடர்பின் வெள்ளிவிழா நிறைவுற்ற பின் (1990) அவர் கால்பந்திலிருந்து ஒதுங்கிவிட்டார்.1970ம் ஆண்டில் அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. 2000ம் ஆண்டில் அகில இந்திய கால்பந்து அமைப்பு 1000-2000ம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை அளித்தது. 2001ம் ஆண்டில் மோகன் பேகன் அணி, மன்னாவுக்கு, மோகன் பேகன் ரத்னா விருது அளித்து கௌரவப்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: